164
மா. இராசமாணிக்கனார்
திருமேனியை உடையையாகி வருத்துவதோடு, அதற்கு மேலும், பந்தியிலே நிற்கப் பழகிப் பாய்ந்தோடவல்ல குதிரை பூண்ட தேர்ப்படையுடைய பகைவரின் மார்பில் பாய்ந்த அவன் அம்பைக் காட்டிலும் மிகுதியாகத் துன்பத்தைச் செய்தல், கொடுமையிலும் கொடுமை அல்லவோ?
வகை வகையாக மாலைகள் அணிந்த பாண்டியனுக்குரிய பொதியமலையின்கண் உள்ள வேங்கை மரத்தின் மலர் போன்ற தேமலை உடையவளே! ஆரம் அணிந்த உன் கொங்கைகள் அப்பாண்டியனுக்குரிய மிக்க வலியும், மிக்கு வழியும் மத நீரும் உடைய யானையின் கொம்புகளைக் காட்டிலும் கொடுமையுடையவாதல் உனக்குத் தக்கதோ?
- என்று, நான் கேட்கவும், தலை கவிழ்ந்து தரையைப் பார்த்து நின்றவாறே, யாதோ ஒன்றை நினைத்து நினைத்துப் பார்ப்பவள் போல் தனக்குத் துணையாக வந்த தோழியரைக் காணும் ஆர்வமிக்க கண்ணுடையவளாகி, என் அறிவைக் கவர்ந்து அடிமையாக்கிக் கொண்டு, மனை நோக்கிச் சென்று விட்டாள்.
வெறி-மணம். வணர்-கடைகுழன்ற. ஒல்கி-ஒதுங்கி. தெரிகல்லா-தெரியாத. கவர்பு-விரும்பி. இகத்தந்தாய்-புறப்பட்டவளே. தேம்-தேன். ஒன்னாதார்-பகைவர். இனையையால்-இத்தன்மை உடையை. கழிகவின்-பேரழகு. பணை-பந்தி. நிறம்-மார்பு. கடப்பு-மிக்க கொடுமை. கோடு-மலை உச்சி. மதவலி-மதத்தால் பெற்ற பலம். கதவ-கொடுமை உடைய. காழ்-ஆரம். இறைஞ்சுபு-கவிழ்ந்து. அமர்த்த-பொருந்தின. அகப்படுத்து-கைப்பற்றிக்கொண்டு.
22. நுமர் தவறு இல் என்பாய்!
அழகிய ஓர் இளம் பெண்ணைக் கண்டான் ஓர் இளைஞன். அவள் அழகு அவன் அறிவை மயக்கி விட்டது; அதனால் காதல் என்றால் என்ன என்பதை அறியாத கன்னிப்பருவத்தினள் அவள் என்பதைக் கருதாமல், ஏதேதோ கூறிப் பிதற்றத் தொடங்கி விட்டான். அப்பிதற்றலே இது:
"வார்உறு வணர்ஐம்பால், வணங்குஇறை நெடுமென்தோள்,
பேரெழில் மலர்உண்கண், பிணைஎழில் மான் நோக்கின்,
கார்எதிர் தளிர்மேனி, கவின்பெறு சுடர்நுதல்,
கூர்எயிற்று முகைவெண்பல், கொடிபுரையும் நுசுப்பினாய்!
நேர்சிலம்பு அரியார்ப்ப, நிரை தொடிக்கை வீசினை,
5