166
மா. இராசமாணிக்கனார்
செருக்கால், உன்னை மேலும் அழகு செய்து போகவிட்ட உன் சுற்றத்தார் மீதும் தவறு இல்லை என்று கூற முடியுமானால் கூறு!
ஒழுக்கங்கள் எல்லாம் கெட்டு மயங்கும் நிலைமை எனக்கு அளித்து நீ அளித்த அக் காமநோயை உன் மடமையால் உணராமல் போகின்றவளே! உன்னிடத்தில் தவறு இல்லை என்றாலும், நுண்மையால் நிற்க மாட்டாமல் தளரும் இடையையுடைய உன் வடிவழகை அறிந்திருந்தும், செல்வச் செருக்கால், அதை மேலும் அழகு செய்து போகவிட்ட உன் சுற்றத்தார் மீதும் தவறு இல்லை என்று கூற முடியுமானால் கூறு!
உள்ளம் உடைந்து, உறுதுயர் மிகுந்து கெடும்படி, வருத்தும் தெய்வமாகி வந்து கொடுமை செய்யும் என் காமநோயை, நான் வாய்திறந்து கூறவும் அறியாது போகின்றவளே! உன்னிடத்தில் தவறு இல்லை; என்றாலும், இளைஞர்களின் உயிரை வாங்கும் உன் வடிவழகை அறிந்தும், செல்வச் செருக்கால், அதை மேலும் அழகு செய்து போகாவிட்ட உன் சுற்றத்தவர் மீதும் தவறு இல்லை எனக் கூற முடியுமானால் கூறு!
நான் குற்றம் சாட்டிக் கூறினால், உன் சுற்றத்தாரையே கூற வேண்டும்; இக்காமநோய் என்னால் பொறுக்க முடியாத அளவிற்குப் பெரிதாகி விடுமாயின், உன் ஊர் நடுவே உள்ள பொதுவிடத்தில் மடலேறி இருந்து, உனக்கு வரவேண்டிய பெரும்பழியை, நிலைநாட்டி வருவேன்.
பிணை-பெண்மான். எதிர்-பெற்ற. புரையும்-ஒக்கும். நுசுப்பு-இடை. உயவுநோய்-காமநோய். இல்லானும்-இல்லையாயினும். போத்தந்த-அனுப்பிய. எய்க்கும்-தளரும். ஒல்லையே-விரைவாக. ஒறுப்பின்-தண்டிப்பின். மடல்-பனை மடலால் குதிரை செய்து அதன்மீது அமர்ந்து. காதலியின் ஊர்நடுவே நிற்றல்.
23. தவம் தலைப்படுவாயோ?
உலகியல் உணர்ந்த உயர்ந்த அறிவுடையவன் அவன். ஆயினும் அவன் உள்ளத்தில் காதல் உணர்வு அரும்பி விட்டது. அதனால் கருத்திழந்து விட்ட அவன், தன் கருத்தைக் கவர்ந்தவளுக்குத் தன்னைக் காதலிக்கும் உணர்வு இன்னமும் உண்டாகவில்லை என்பதை உணராமல், அவள் பின் திரிந்து காதல் பேச்சுப்பேசத் தொடங்கி விட்டான். அது இது: