கலித்தொகை - குறிஞ்சிக் கலி
173
ஆயின் ஏஎ!
பல்லார்நக்கு எள்ளப் படுமடல்மா ஏறி,
மல்லல்ஊர் ஆங்கண் படுமே, நறுநுதல்
நல்காள், கண்மாறிவிடின் எனச்செல்வான்; நாம்
எள்ளிநகினும் வரூஉம்; இடைஇடைக்
25
கள்வர்போல் நோக்கினும் நோக்கும்; குறித்தது
கொள்ளாது போகாக் குணன்உடையன், எந்தைதன்
உள்ளம் குறைபடாவாறு."
தலைவி, தோழி, தலைவன் மூவரும் அருகருகே நிற்கத், தோழி, தலைவியை நோக்கிக் கூறியது: ஏடி! பெண்ணே! இவனைப் பாரேன்! இவன் பெறாத குறைதான் யாதோ? கேடு கெட்ட இவன் நிலையைப் பார்! பண்பால் சிறந்த பெரியோர், யாதோ காரணத்தால் தன் செல்வம் எல்லாம் அழிந்து விட்டமையால், வறுமையுற்று, தம் வறுமைத் துயரைப் போக்கவல்ல தம் உறவினர் சிலரிடம் சென்று தம் குறையை வாய்திறந்து கூற முற்பட்டு, குறைகூறிப் பழகியறியாத தம் பெருந்தன்மையால், ஏதும் கூறி மாட்டாது நிற்பாரைப் போல, என்னிடம் கூறக் கருதியதைக் கூறமாட்டாமல், என்னைப் பலமுறை நோக்குவான். ஆனால், அவனை நோக்க நான் தலை நிமிர்ந்தால் உடனே தன் தலையைத் தாழ்த்திக் கொள்கிறான்.
தோழி: ஏடா! எம்மோடு யாதோ ஒரு தொடர்பு கொள்ளக் கருதியுள்ளாய் போல் குறிப்பால் காட்டுகின்றாய். அதனால், பிரியாது தொடரும் நிழல்போல் என்னை விட்டுப் பிரியாது தொடர்கின்றாய்; உன் குறைதான் யாதோ? கூறு!
தலைவன்: சொன்னால், நான் விரும்புவதை, இதோ நிற்கும் இவள் மறுக்காது கொடுப்பாளோ? ஒருவர், தம்மிடம் வந்து யாதேனும் ஒன்றை இரப்பாராயின் முகம் வேறுபடாது, அவர்க்கு அவர் விரும்புவதைக் கொடுக்கமாட்டாமல் உயிர் வாழ்வதைக் காட்டிலும் உயிரிழந்து போவதே நல்லது!
தோழி: இவள் தந்தை, தன்னிடம் வந்து இரப்பவரிடம் காட்டும் அன்பால், அவர்க்கு மிக உயர்ந்த பொருள்களையும் கொடுக்கும் கொடைக்குணம் உடையவனாவான். நீ விரும்பும் பொருள் யாது?
தலைவன்: பேதைப் பெண்ணே! பொருளை இரந்து நிற்கும் இழிநிலை எனக்கு என்றும் உண்டானதில்லை. மருண்டு நோக்கும்