மருதத் திணை ஆற்றுப் பாய்ச்சலால் வளம்பெறும் வயலும் வயலைச் சேர்ந்த நிலமும் மருதநிலம் என அழைக்கப்பெறும். அந்நிலமக்கள் களமர், உழவர் எனவும், மக்கள் தலைவன் மகிழ்நன், ஊரன் எனவும் அழைக்கப் பெறுவர். நெல்லும் கரும்பும் உணவாம். தொழில் உழவாம். மணந்து மனையறம் மேற்கொண்ட ஆண்மகன், மனைவியை மறந்து, பரத்தை வீடு சென்று வாழ்வதும், அதனால் அவன் மனைவி வருந்துவதும், அவன் மீண்டு வந்தக்கால் அவனோடு அவள் ஊடி நிற்பதும், இதை ஒட்டிய வேறு பிற நிகழ்ச்சிகளும் மருதநில ஒழுக்கங்களாம். பாடிய புலவர் மருதன் இளநாகனார் மருதக் கலியைப் பாடியவர் மதுரை மருதன் இளநாகனார் என்பவராவர். இறையனார் களவியலுக்குச் சிறந்த உரை வகுத்தவருள் இவரும் ஒருவராவர். இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய மாறன் வழுதி, நாஞ்சில் வள்ளுவன், பிட்டங் கொற்றன், சிறுகுடிவாணன், கழுவுள், கொங்கர், கோசர், மழவர், வேளிர் என்ற பேரரசர்களையும், சிற்றரசர்களையும், மறவர்குடி மக்களையும் பாடிப் பாராட்டியுள்ளார். மதுரை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், ஊனூர், சாய்க்கானம், செல்லூர், வீரை முதலிய பேரூர்களும் இவர் பாட்டில் இடம் பெற்றுள்ளன. இவர் பாடிய பாக்கள் 79. நற்றிணையில் 12; குறுந்தொகையில் 4; கலித்தொகையில் 35; அகநானூற்றில் 23; புறநானூற்றில் 5.
பக்கம்:கலித்தொகை 2011.pdf/188
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
