பக்கம்:கலித்தொகை 2011.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைத் திணை காடும், காட்டைச் சேர்ந்த நிலமும் முல்லை நிலம் என அழைக்கப் பெறும். அந்நிலத்து மக்கள் ஆயர்,இடையர், கோவலர், பொதுவர் எனவும், மக்கள் தலைவன் அண்ணல், தோன்றல் எனவும் அழைக்கப் பெறுவர். கம்பும், வரகும், பாலும், நெய்யும் உணவுப் பொருள்களாம். ஆடு மாடு மேய்த்தல், மேட்டு நிலங்களை உழுது பயிர் விளைத்தல் தொழில்களாம். காதலித்த ஒரு பெண்ணை மணக்க அவர் குலமுறைப்படிக் கொல்லேறு தழுவுவதும், காதலன் வருகையை எதிர்நோக்கிக் காத்திருப்பதும் முல்லை நில ஒழுக்கங்களாம். பாடிய புலவர் சோழன் நல்உருத்திரன். முல்லைக் கலியைப் பாடிய புலவர் சோழன் நல்லுருத்திரன் என்ற பெயருடையாராவர். இவர் சோழர் குடியில் பிறத்தவ ராவர். ஆயினும் பாண்டியர்களைப் பல்லாற்றானும் பாராட்டி யுள்ளார்.ஆயர் வாழ்க்கையை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். பாரதக் கதைகளைப் பாட்டின் இடை யிடையே, பொருந்தும் இடங்களிலெல்லாம் புகுத்தி வைத் துள்ளார். 'புலிபோல் ஊக்கம் மிக்க மக்களாய் வாழவேண்டு மேயல்லது, எலிபோல் திருட்டுள்ளம் உடையராய் வாழக் கூடாது' என்ற பொருளைத் தோற்றுவிக்கும் புறநானூற்றுப் பாட்டு (புறம்:190) இவர் பெருமைக்குச் சான்று கூறி நிற்கிறது. இவர் பாடிய பாக்களாக, இம்முல்லைக் கலிச் செய்யுள்கள் பதினேழும், அப்புறநானூற்றுச் செய்யுள் ஒன்றும் ஆகப் பதினெட்டுச் செய்யுள்களே கிடைத்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/274&oldid=1689601" இலிருந்து மீள்விக்கப்பட்டது