பதிப்புரை
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான 'கலித்தொகை' எனும் சிற்றிலக்கிய நூலுக்கு தெளிந்த உரையொன்றை நூலாக வடித்துள்ளார், பேராசிரியர் மா. இராசமாணிக்கனார் அவர்கள்.
பாலைக் கலி பாடியவர் பெருங்கடுங்கோன் என்றும், குறிஞ்சிக் கலி பாடியவர் கபிலர் என்றும், மருதக்கலி பாடியவர் மருதன் இளநாகனார் என்றும், முல்லைக் கலி பாடியவர் சோழன் நல்லுருத்திரன் என்றும், நெய்தற் கலி பாடியவர் நல்லந்துவனார் என்றும் வெண்பாவொன்று கூறுகின்றது. ஆயின் 'கலித்தொகை ஆசிரியர் ஒருவரே' எனக் கூறுவாருமுளர்.
கலித்தொகைச் செய்யுட்களுள் சொற்செறிவையும் சொல் தளர்வினையும், நடைமிடுக்கையும், எளிய நடையையும், பழைய தமிழ்க் கொள்கைகளையும், குடிபுகுந்த புதிய கொள்கைகளையும், முற்காலக் கருத்துக்களையும், பிற்காலக் கருத்துக்களையும் கொண்ட நடைவேறுபாடுகள் உடையன.
கடைச்சங்கத் தொகை நூல்களுள், பல களவியலை அடிப்படையாகக் கொண்ட ஒத்த காமத்தைப் பற்றியவை. பாடிய ஒத்த காமச் செய்யுட்களும் உயரிய பொருள் நோக்குடையன.
காடும் மலையும், மழையற்ற கோடையில் தம் வளங்களை இழந்து வறண்டு போவதால் பாலை எனும் புதுப்பெயர் பெறும். பாலைத்திணை பற்றிய பாக்கள் முப்பத்தைந்தும் பாலை நிலத்து நிகழ்ச்சிகளை விளங்கக் கூறுவதோடு, அரசியல், கல்விச் சிறப்பு, செல்வத்தின் இயல்பு போன்ற பொருள் குறித்த பல உண்மைகளையும் உணர்த்துகின்றன.