பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசுவத்தாமன்

35

அசோகன்

எழுதவில்லை என்பதும் சில ஆராய்ச்சியாளர்களின் முடிவு.

ருத்ராலங்காரம் அல்லது கல்பனாலங்க்ருதிகா (கல்பனாமண்டிதிகா) என்ற புத்த கதைகள் கொண்ட காப்பிய நூலொன்றை இவனே செய்ததாக முன்பு நம்பப்பட்டு வந்தது. இந்நூல் அசுவகோஷன் காலத்தில் இளைஞனாயிருந்த குமாரலாதன் என்ற பௌத்த ஆசிரியன் எழுதியதென்று இப்போது தெளிவாகிறது.

கண்டீ ஸ்தோத்ரம் என்ற பக்திபரமான சிறு துதியொன்றும் இவன் இயற்றியதாகக் கூறப்படுகிறது. காப்பியத்தைப் பௌத்தமதத் தொண்டில் பயன்படுத்தியது போல் நாடகக் கலையையும், அசுவகோஷன் கையாண்டான் என்ற செய்தியும் கிடைக்கிறது. சாரீபுத்ரன், மௌகல்யாயனன் இருவரையும் புத்தர் தம் மதத்தைத் தழுவச் செய்த நிகழ்ச்சியை அசுவகோஷன் பத்து அங்கங்கள் கொண்ட சாரீபுத்ர ப்ரகரணம் என்ற நாடகமாக எழுதினான். இந்தநாடக நூல் இந்தியாவில் அகப்படவேயில்லை; மத்திய ஆசியாவில் பண்டைய பௌத்த ஸ்தலங்களைத் தோண்டி எடுக்கும்போது டர்பான் (Turfan) என்ற இடத்தில் இந்த நாடகத்தின் சிற்சில பகுதிகள் ஆச்சரியமாய் லாய்டர்ஸ் (Leuders) என்ற ஜெர்மன் சம்ஸ்கிருதப் பேராசிரியரால் கண்டுபிடிக்கப்பட்டன. இத்துணுக்குக்களில் வேறு இரு நாடகங்களின் பகுதிகளும் காணப்படுகின்றன; ஒன்றில் கீர்த்தி, புத்தி முதலிய குணங்கள் பாத்திரங்களாக வருகின்றன; மற்றென்றில் விலைமாது, விடன் முதலியவர் காணப்படுகின்றனர். இதிலிருந்து கிறிஸ்து தோன்றின காலத்தில் சமஸ்கிருத நாடகவிலக்கியம் பல மாதிரியான வளர்ச்சியை அடைந்திருந்தமை தெரிகிறது. இவை போலவே ராஷ்ட்ரபால நாடகம் என்னும் அசுவகோஷன் செய்த நாடகமொன்றும் பிற்காலத்திய நூல்களிலுள்ள மேற்கோள்களிலிருந்து தெரிய வருகிறது.

பௌத்த மத நூல்களுள் பல இவன் பெயரில் காணப்படும்; ஆனால் இவற்றுள் எவை இவனே எழுதியவை, எவை பிறர் எழுதி இவனுக்கிருந்த புகழால் இவன் மேல் சுமத்தப்பட்டவை என்று அறிய முடியாமற் குழப்பமாயிருக்கிறது.

அசுவத்தாமன் : 1. துரோணன் மகன்; பாரதப் போரில் ஈடுபட்டவன்; சிவனருள் பெற்றவன்; துரியோதனன் ஏவலாற் பாண்டவர் மக்களாகிய இளம் பஞ்ச பாண்டவர்களை பாண்டவ ரென்றெண்ணிக் கொன்றவன்; அருச்சுனனைப் போன்ற வில்வீரன்.

2. மாளவ மன்னனுடைய பட்டத்து யானை. பாரதப் போரில் இது வீமனால் இறந்ததைக் கூறிய தருமன் மொழியைத் தன் மகன் இறந்ததாகத் துரோணன் நம்பி உயிர் விட்டான்.

அசுவமேதம் : உத்தமான குதிரையின் நெற்றியில் அரசனது வீரம் முதலியவைகளை வரைந்த பட்டத்தைக் கட்டிப் பூப்பிரதட்சிணம் செய்வித்து பின் செய்யும் யாகம்.

அசுவ லட்சணம் : பண்டை அறிஞர் குதிரைகளை அவற்றின் நிறம், உடலமைப்பு, இயல்பு முதலியவற்றை வைத்துப் பாடலம், கோடகம், இவுளி, வன்னி, குதிரை, வரி, கந்துகம், புரவி என எட்டு வகையாகப் பிரிப்பர். குதிரைகள் வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, மிசிரம் என ஐந்துவித நிறங்கள் உடையனவாம். முகம், மார்பு, உச்சி, வால், கால்கள் வெளுத்திருப்பது அட்டமங்கலம்; முகமும் கால்களும் வெளுத்திருப்பது பஞ்சகல்யாணி; வயிறும் மார்பும் வெளுத்திருப்பது வாரணம். அண்டவர்த்தம் முதலிய எட்டுச்சுழிகள் ஆகாவாம். சிரசில் இரண்டு சுழியும், நாபியில் நான்கும், மார்பில் இரண்டும், நெற்றியில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாகப் பத்துச்சுழிகள் குறையாது இருத்தல் நலமாம். மூக்கின் நடுவில் ஒன்று அல்லது மூன்று சுழிகளையுடையது குதிரைகளுள் சக்கரவர்த்தி எனப்படும். இதன் விரிவைச் சுக்கிரநீதியிலும் திருவிளையாடற் புராணத்திலும் காண்க.

அசுவான் : இது இப்பெயர் கொண்ட எகிப்திய மாகாணத்தின் தலைநகர். கைரோவிற்கு 590 மைல் தெற்கே நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்நகருக்குக் கைரோவிலிருந்து ரெயில் போகிறது. மாகாணத்தின் பரப்பு: சு .337 ச. மைல்; மக்; 286,854(1947).

இந்நகர்ப் புறத்தே புராதன எகிப்திய நாகரிகத்தின் சின்னங்கள் பல காணக்கிடைக்கின்றன. இங்குப் பல பழைய கோயில்களின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து இந்நகர் சென்ற 40 நூற்றுண்டுகளாகவேனும் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. 16ஆம் நூற்றுண்டில் சலீம் என்னும் துருக்கி சுல்தான் இதைக் கைப்பற்றி இங்கு ஒரு ராணுவத்தையும் நிறுத்தினான். அக்காலத்தில் இங்கு வந்து குடியேறினவர்களுடைய வழித்தோன்றல்களே இப்போது இங்கு மிகுதியாகப் காணப்படுகின்றனர். 19ஆம் நூற்றுண்டின் இறுதியில் ஆங்கிலேயர்கள் எகிப்தியப் படையின் உதவியைக் கொண்டு இந்நகரை ஆக்கிரமித்துக் கொண்டனர். எகிப்திற்கும் சூடானிற்கும் அபிசீனியாவிற்கும் இடையே இது ஒரு முக்கியமான சரக்கு இறக்கேற்றுத்தலமாக விளங்குகிறது. இதற்கு 3 1/2மைல் வடக்கே அசுவான் அணை கட்டப்பட்டிருக்கிறது. நகரின் பரப்பு:3.7. சதுர மைல்; மக்:25,397 (1947).

அசுவான் அணை : பார்க்க: அணைகள்.

அசுவினி (அசுவதி) (Arietis βγ): குதிரையின் தலைபோலுள்ள ஆறு நட்சத்திரங்கள் கொண்டது; 27 நட்சத்திரங்களில் முதலாவது.

அசென்ஷன் தீவு : தென் அட்லான்டிக் கடலில் செயின்ட்ஹெலினா தீவிற்கு 700 மைல் வடமேற்கேயுள்ள எரிமலைத் தீவு. இத்தீவைச் சுற்றியுள்ள கடலில் பலவகை மீன்களும், ஆமைகளும் ஏராளமாகக் கிடைக்கின்றன. தீவில் முயல்களும், காட்டாடுகளும் காணப்படுகின்றன. இத்தீவை முதல் முதலில் போர்ச்சுகேசியர்கள் 1501-ல் அசென்ஷன் தினத்தன்று கண்டுபிடித்ததால் இது இப்பெயர் பெற்றது. ஆங்கிலேயருக்குச் சொந்தமான இத்தீவு 1815-ல் நெப்போலியன் செயின்ட் ஹெலினுவிற்கு வந்த பின் ராணுவ முறையில் வலுப்படுத்தப்பட்டது. சுமார் 200 மக்களே இத்தீவில் வசிக்கின்றனர்.

அசோகன் : மௌரிய அரசன் பிந்துசாரனின் ஆட்சியில் அவன் மகன் அசோகன் தட்சசீலத்தின் மண்டலாதிபதியாக இருந்து, அங்கு விளைந்த கலகத்தை அடக்கி, நாட்டில் அமைதியை விளைவித்தான். கி.மு.270-ல் தன் தகப்பனிறந்ததும் இவன் அரியணை ஏறினான். அதே ஆண்டில் கலிங்கநாட்டுடன் போர் தொடங்கினான். அதில் வெற்றிபெற்ற அசோகன் அந்நாட்டு மக்கட்கு ஏற்பட்ட துயரை உணர்ந்து வருந்தினான். இனி ஒரு நாட்டின் மீதும் போர் தொடுப்பதில்லை என்று சபதம் செய்து கொண்டான். இனித் தன்மவிசயமே செய்வது எனறு தீர்மானித்தான்.

அசோகனால் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களின் இருப்பிடங்களை கொண்டு அவன் சாம்ராச்சியத்தின்