பக்கம்:கல்வத்து நாயகம் (கவிதைகள்).pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

கல்வத்து நாயகம்

நிறைதவிர்ந்த நெஞ்சினொடும்
நீர்மையிலா வன்கணொடும்
முறைதவிர்ந்த வெவ்வினைகண்
மூடனேன் செய்வேனோ
குறைதவிர்ந்த வன்பருளக்
கோகனகத் துண்மேவுங்
கறைதவிர்ந்த மாமதியே
கல்வத்து நாயகமே!


நோவாக்கா நுஞ்சரணம்
நோற்றுவந்தும் நுண்ணறிஞர்
தீவாக்கால் வெந்துபட்ட
தீயேனா யாவேனோ
ஏவாக்கா லென்னுணர்கே
னென்செய்கே னேவியெனைக்
காவாக்காற் காக்குநரார்
கல்வத்து நாயகமே !

பற்றாலும் நட்பாலும்
பத்திதர நின்றொருக்காற்
சொற்றாலும் நுந்துணைத்தாள்
தொல்லைவினை தூராதோ
உற்றாலு மோனமுள
மோய்ந்தாலும் வேதகலை
கற்றாலு மாவதெவன்
கல்வத்து நாயகமே!

இன்னிசைப் பாடல்

35


ஊன்மலரு மெவ்வுயிரு
மொன்றென்றே யுன்னிமனந்
தான்மலரு மன்பினிலை
தாங்கிநிற்ப தெந்நாளோ
வான்மலரு மும்பர்குழாம்
வாயார வாழ்த்துமிரு
கான்மலருங் கான்மலரீர்
கல்வத்து நாயகமே!

விரைகடந்த பைங்குழல்சேர்
மெல்லிநல்லார் வேட்கையெனுந்
திரைகடந்து நும்மடிக்கீழ்
சேர்ந்திருப்ப தெந்நாளோ
நிரைகடந்த வன்பர்குழாம்
நேர்ந்திறைஞ்சச் சூழ்ந்தவருட்
கரைகடந்த வாருதியே
கல்வத்து நாயகமே!

சூல்பட்ட மைம்முகில்விண்
தோய்வுபட்டுத் தூவுமழைப்
பால்பட்ட பைந்தளிர்போல்
பாவியே னுய்வதற்கே
வேல்பட்ட புண்ணினுளம்
வெந்துபட்டு மாளாதுங்
கால்பட்ட தூசருள்வீர்
கல்வத்து நாயகமே!