பக்கம்:களத்துமேடு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

95

உன்னைச் சாப்பாட்டுக்குக் கூப்பிடுகிறேன். வா, சாப்பிடலாம். நீங்களும் கைகழுவுங்க அம்மான்! அம்மான் மகளே தைலிப் பொண்ணு! சோறு வை. ஆமா, இலையைப் போட்டுச் சோறு வை!” என்று சொன்னான் சிங்காரம்.

தன் அத்தை மகனின் அழகான நகைச்சுவையை அனுபவித்துப் புன்னகை செய்த வண்ணம், புதுத்தெம்புடன் இலைகளைப் போட்டுப் பரிமாறத் தொடங்கினாள். நல்லெண்ணெயில் வறுத்த சுறாகருவாட்டுத் துண்டங்கள் அற்புதமாக மணத்தன. சீமைக் கத்திரிக்காய்ச் சாம்பாரின் வாசம் கமழ்ந்தது. அரைக்கீரைக் கூட்டு வேறு.

தண்ணீர்ச் செம்பை எடுத்துச் சரவணனிடம் கொடுத்தான் சிங்காரம். அவன் கையலம்பி முடித்ததும், செம்பைத் தன் அம்மானிடம் நீட்டினான். கடைசியாக சிங்காரம் கைகளைச் சுத்தப்படுத்திக் கொண்டான்.

மூன்று இலைகள் காத்திருந்தன.

“உட்காருங்க மாப்பிள்ளே! குந்து சிங்காரம்!” என்று வேண்டினார் சேர்வை. இருவரையும் இருபக்கத்தில் வைத்துக்கொண்டு சேர்வை நடுவில் அமர்ந்தார். “வெக்கம் காட்டாமச் சாப்பிடுங்க ரெண்டு பேரும்!” என்று கேட்டுக் கொண்டு சோற்றைப் பிசையைத் தொடங்கினார் அவர்.

குனிந்த தலையை நிமிர்த்தித் தைலம்மையை ‘நோட்டம்’ இட்டவண்ணம் சாப்பிட்டான் சரவணன்.

குனிந்த தலையை நிமிர்த்தாமல் சிந்தனை வசப்பட்ட நிலையில் சாப்பிட்டான் சிங்காரம்.

வடக்கு முடுக்கில் இருந்த கைவிளக்கில் ஈ விழுந்தது; அணைந்து விட்டதே விளக்கு!.......

மறு சோறு போட்டாள் தைலம்மை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/102&oldid=1386217" இலிருந்து மீள்விக்கப்பட்டது