பக்கம்:களத்துமேடு.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

களத்து மேடு

கையை அமர்த்தினான் சரவணன்.

கையை அமர்த்தவில்லை சிங்காரம்.

“நீங்க இன்னம் துளி வாங்கிக்கிடுங்க,” என்று சரவணன் இலைமுன் நின்று கூறினாள் அவள்.

அவன் எழுந்து விட்டான்.

“நீங்க அஞ்சாறு வாங்கிக்கங்க,” என்று சிங்காரத்தை வேண்டினாள் அவள்.

‘ஓ!’ என்று சொல்லி, வாங்கிக் கொண்டான் சிங்காரம்.

சேர்வை வெறும் மிளகுரசச் சோறு தான் உண்டார். அது தான் அவருக்குப் பத்தியம்! எலுமிச்சை ஊறுகாய் உதவிற்று.

கைகளைக் கழுவித் துடைத்தவண்ணம் நின்றான் சரவணன். தார்க்குச்சி அவன் கரங்களுக்குத் தாவியிருந்தது.

“நான் பறியிறேன். நேரம் ஊர்ப்பட்டது ஆகிடுச்சு. நாளைக்கு இங்கிட்டாலே மறுதப்படி வாரேன். வந்து நாம பேசிக்கிடலாமுங்க,” என்று சொன்னான் சரவணன்.

உயிர்காத்த நண்பனை வாசல்வரைக்கும் சென்று வழியனுப்பித் திரும்பினான் சிங்காரம். அவனுடன் சேர்வையும் சென்று மீண்டார்.

ரேக்ளா காட்டாமணக்குச் செடிகளை மிதித்தும் போட்டுவிட்டுப் பறந்தது.

சிந்தனைத் தேக்கம் கண்டவளாக தூணுடன் தூணாக நின்றாள் தைலம்மை. கைவிளக்கு அவிந்து விட்டிருந்ததை அவள் அப்போது தான் கண்டாள். அவள் நெஞ்சம் துடித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/103&oldid=1386218" இலிருந்து மீள்விக்கப்பட்டது