பக்கம்:களத்துமேடு.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

99

தப்பு” என்று மண்ணகுடி‘ 'ராவன்னா மானா’ வந்து கறாறாக ‘மத்திசம்’ செய்தும்கூட செங்காளியப்பன் சேர்வைக்கு மனசு இளகவில்லையே!—கடைசியில், நீதிதான் அண்ணன் தம்பிக்குரிய சொத்துச்சுகத்தைப் பாகம் பிரித்தது. அந்த ஒரு கட்டத்தில் இருந்த மனக்குழப்பம் இப்பொழுதும் அவரை முற்றுகையிட்டிருந்ததென்பதை அவர் புகைத்த அந்த மூன்றாவது சுருட்டு சொல்லிக் காட்டியது.

“ஆத்தா” என்று விளித்தபடி வந்தார் அவர். சுருட்டின் புகையைக் கடைசியாக இழுத்து வீசிவிட்டு நின்றார்.

மௌனமான சோகத்துடன் தலையை நிமிர்த்தினாள் தைலம்மை.

“என்ன”ஆத்தா, ரொம்ப ரொம்ப யோசனை செஞ்சுக்கிட்டு சாப்பிடாம இருக்கே?” என்று வினவினார் அவர்.

“அவ்லாம் ஒங்களைப்பத்தித்தான் ரோசிச்சுக்கினு இருந்தேனுங்க,” என்றாள் அவள்.

மகளின் விடையைக் கேட்டதும் சுருக்கென்று தைத்தது சேர்வைக்கு, உடனே, சரவணனின் ஞாபகம் தான் அவருக்குத் தோன்றியது. அவர் மகளையே உறுத்துப் பார்த்தார். உத்தரப்பகுதியில் ஓட்டை விழுந்திருந்த சீமையோட்டின் வழியே வெட்டிப்பாய்ந்த சீதளக்கதிர்களின் ஒளியில் மகளின் கண்கள் பளபளத்ததைக் காணமுடிந்தது, அவரால். தாம் தனித்திருக்கையில் அடைந்த வேதனையும் அவரை மெள்ள மெள்ள ஓட்டியது. தம் தவற்றை மகளிடம் சொல்லி மனம் தேறவேண்டும் என்று கொண்டிருந்த அந்த மனம் இடையில் மாறிய விசித்திரத்தையும் அவரால் மறந்து விட முடியவில்லை. தொண்டையைக் கனைத்துக் கொண்டார். பனியின் சாரலையும் மீறி முகத்தில் வேர்வை. துளிர்த்தது. “ஆத்தாளுக்குக் கண்ணு கசியுதே? ஏன்?” என்று தாழ்குரலெடுத்துக் கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/106&oldid=1386237" இலிருந்து மீள்விக்கப்பட்டது