பக்கம்:களத்துமேடு.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

111


வெய்யிலின் வெக்கை அவள் மண்டையை அரித்தது. சாணத்தைத் தூக்கி வீசி எறிந்துவிட்டு, நகர்ந்தாள்.

"அடியே தைலி! வாரீயாடி தலைமுழுக?" என்று கேட்டவண்ணம் கோடிவீட்டுக் குணமாலை வந்தாள். அவள் ஏன் அப்படி, 'திக்கினவார்த்தை' செப்பினாள் என்று உடனே தைலம்மை நொந்தாள். அவள் அழைத்தது தலை முழுகத்தானே?... தலையை முழுக அல்லவே?...

"நானு வல்லே. நீ போடி!"

"சரீடி! ஒனக்கு எம்புட்டோ சோலி இருக்கும். ஒண்ணுக்கு ரெண்டாய் விருந்துக்கு ஆளுங்க வந்திட்டா, நீ என்னதான் பண்ணுவே, பாவம்! நான் போறேண்டியம்மா! நான் தீட்டுக்காரியாக்கும்!" என்று உண்மை விளம்பிப் பிரிந்தாள் குணமாலை.

கடலை ஆய்வதற்கென்று குடியிருப்புப் பிள்ளைகள் வந்தார்கள், கைகளில் ஏந்திய குட்டான்கள் சகிதம்!- பற்றாததற்கு, பூவத்தக்குடிச் செட்டித்தெரு நண்டுசுண்டுகளும் வந்து விட்டன. நண்டுக்குக் கடலை ஆய்வதற்குத் தெரியாது. யாரும் சொல்லிக் கொடுத்தால் தானே? வந்தவர்கள் சின்னப் பிள்ளைகளும் சின்னப் பெண்களுமே! குறுணிக் கடலை ஆய்வதற்குக் கூலி பத்துக்காசு என்றால், அது இளைப்பமாக்கும்?" இதைத்தவிர, நாலு இரண்டு உடைத்து உள்ளே போட்டுக்கொண்டது மிச்சம்! வயிற்றை வாயை வலித்தால், இருக்கவே இருக்கிறது சர்க்கார் ஆஸ்பத்திரி!...

கடலை ஆயவந்த கூட்டத்துக்குக் கொல்லைப் புறத்தைக் காட்டினான் தைலம்மை. அவளுக்குக் கண்களைக் கட்டிக் காட்டில்விட்ட மாதிரி இருந்தது. இனம் புரியாத அச்சமும், இனம் புரிந்த தவிப்பும் அவளை வறுத்தெடுத்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/118&oldid=1386386" இலிருந்து மீள்விக்கப்பட்டது