பக்கம்:களத்துமேடு.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

5


உட்புறம் தாவியோட எத்தனிக்கையில், சரிந்து விழுந்த மேற்புறச் சேலையை வாகாகக் கொய்து போட்டுக் கொண்ட போது, மார்பகத் திரட்சியில் விரல் நுனி ஸ்பரிஸசுகம் பெற, அம்மயக்கத்தில் சற்றே லயித்து நின்று, பிறகு உள்ளே அடியெடுத்து வைத்தபோது, எல்லாமே அவள் போட்ட புள்ளிக்குத் தப்பாமலே இருக்கக் கண்டாள். 'சவாசு!...' மகிழ்வு தடம் காட்டியது. தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள். 'அப்பன்காரக வந்திடுவாக, கோழி கூப்பிட கஞ்சி குடிச்சிட்டுப் பறிஞ்சவுக, திரும்புற பொழுது தான். ம்!...எப்பவும் போற இடம் வார இடத்தைச் சொல்லிப்புட்டுத்தான் புறப்படுவாங்க. இப்பைக்கு அந்த வழக்கமும் அத்துப்போச்சு..... ஆத்தாடி, மறந்துப்புட்டேனே......! குடி தண்ணி ஒரு முட்டி இறைச்சாந்திட வேணும்...அடி சாய்ஞ்சிருச்சே!-'

பிரிமணைகளை வரிசைக்கிரமாகப் பரப்பிவைத்து அதனதன் இடத்தில் வெஞ்சனம், சோறு, குழம்பு என்று சட்டிப் பானையை அமர்த்திவிட்டு, நீர் கொணர எண்ணிப் பானையை எடுத்தாள் தைலம்மை.

"தைலி! ...ஏலே தைலி!"

தோழியை அழைத்தாள் தோழி.

"அடியே பொன்னாயி! ... இப்பத்தான் ஒன்னை நெனைச்சுக்கினேன். நீயே நேருக்கு நேரே வந்து நிக்கிறியே....! வா, வெரசா...அப்பன்காரரு வூட்டிலே இல்லே!..."

தென் முகத்தில் நின்ற வேப்ப மரத்தை இலக்கு வைத்துப் பிரிந்து நடந்தார்கள்.

"சாமியார் கேணிக்கா போவம்?"

"அங்கிட்டாலதான் கள்ளியைச் சீவிப் போட்டிருக்காங் களாங்காட்டியும்!...கங்காணித் தோட்டத்துக்குத் தான் நாட வேணும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/12&oldid=1386082" இலிருந்து மீள்விக்கப்பட்டது