பக்கம்:களத்துமேடு.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

115


எண்ணங்களும் செம்மறிக்குழுவுக்கு ஒப்புதான். கூடிச் சேர்ந்தால் எல்லாம் ஒரேடியாகக் கூடும்

மேலும் ஏதேதோ நினைவுகள் சிங்காரத்தை ஆட்கொண்டன. நின்ற நிலைப்பிலிருந்து அண்ணாந்து நோக்கினான். காய்களும் பழங்களுமாகத் தொங்கின. எம்பினான். பழமொன்று அவன் கைக்கு வந்தது. ஒருமுறை சிறுமி தைலி புளியம்பழம் வேண்டுமென்று அடம் பிடிக்க, அவன் மரம் ஏறி ஒரே ஒரு பழம் பறித்துக்கொடுத்த காட்சியை ஒளிப் பதிவு செய்து காட்டியது மனம், "சொந்தம் சோவாரி வேணுமின்னு தவம் கிடக்கிறது. இதுக்குத்தான்!” என்று அவள் பிஞ்சு நெஞ்சம் செப்பவில்லையா?

கண் நீரை விரல் நுனியால் எடுத்து அழகு பார்த்து விட்டு, அமைதியின் நம்பிக்கையோடு வீசினான் சிங்காரம், தைலி! உன்னோட நினைப்பு ஒண்ணேதான் என் வரைக்கும் வாழ்க்கையாக இருந்து வந்திருக்குது; இனிமேயும் அப் படியே இருந்து வரும்!... இதை நீ புரிஞ்சுக்கிட்டிருப்பியா, தைலி? நெஞ்சு தளும்பிற்று.

குணதிசையிலிருந்த சீரங்கத் தம்மா மனையிலிருந்து பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள் அவ்வழியே சென்றதை வேடிக்கை பார்த்தான் சிங்காரம். ஏக்கப் பெருமூச்சுடன் நின்ற அவனைக் கூப்பிடு தொலைவிலிருந்த சீரங்கத்தம்மாள் கூப்பிட்டாள். "மீனாச்சி அக்காமவனே, சொகமா?... நீ வந்திருக்கிற தாக்கலை தைலி சந்தோசத்தோட சொன்னிச்சப்பா!" என்றாள். அதற்கு அவன் "ஆமாங்க, நல்ல சொகந்தானுங்க!" என்று பதிலிறுத்தான்.

சிங்காரம் பேசி வாயை மூடியிருந்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/122&oldid=1386280" இலிருந்து மீள்விக்கப்பட்டது