பக்கம்:களத்துமேடு.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

களத்து மேடு


"ஒன்னை நான் மறக்க ஏலுமா? அப்படி மறந்தாக்க, நான் மனுசனாக நடமாட வாய்க்குமா?"

"சரி' சரி! போயிட்டுவா!....ஆமா, சரவணா! போயிட்டு வா!" என்று சிரித்தான் சிங்காரம்.

சரவணனும் சிரித்துக் கொண்டு தார்க்குச்சியைக் கையில் எடுத்துச் சொடுக்கி வீசினான்.

காளையின் சலங்கைகள் குலுங்கி மறைந்தன!

கண்களைத் துடைத்துக் கொண்டு விழி மீட்டி, வழி மீண்டான் சிங்காரம்.

தரையில் விழுந்து கிடந்த மாம்பழத்தைச் சுவைக்க இரண்டு அணில்கள் போட்டியிட்டுப் போராடிக் கொண்டிருந்த காட்சியை அவன் வழிமறித்துச் சென்று விட ஒப்பவில்லை. துளிப்பொழுது நின்றான்.

என்ன அதிசயம்!

அந்த மாம்பழத்தை அந்த அணில்கள் இரண்டுமே சுமுகமான உறவுடன் சுவைக்கத் தொடங்கின!

நடந்தான்.

வரும் விதி ராத் தங்காதாம்!

கதிர்க் கொத்து 13

மாய விதி

ம், வரும் விதி ராத்தங்காது என்பதுதான் மூத்தோர் முன்மொழியாகும். ஆனால், இப்போது அந்த விதி பகலில் கூட தங்கவில்லை. அது மாயமாக மடத்துக்குளத் தைச் சுற்றி மாயமாகச் சிரித்துக் கொண்டேயிருந்தது. சிரிப்பு என்றால், அற்ப சொற்பமான சிரிப்பா, என்ன? ரொம்பவும் விஷம் நிரம்பிய சிரிப்பு; வினயமான சிரிப்புங்கூட!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/127&oldid=1386324" இலிருந்து மீள்விக்கப்பட்டது