பக்கம்:களத்துமேடு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

களத்து மேடு


"ஓ... அங்கால போவனுமாக்கும்? புரியுது... புரிஞ்சுக் கிட்டுது; நட. எட்டிப்போடுடி காலை!..." பொன்னாயி விஷமத்தனமாக நகைத்தாள். அவள் அவசரக்காரி. ரவிக்கையை முடிந்து கொள்ளாத குறையைத் தீர்த்தாள். 'கைப்பிள்ளையோட தீனக்குரலிலே என்னதான் மட்டுப்பட்டுத் தொலைக்குது? ... ம்... என்னை மாதிரி இப்பைக்கு தைலியும் நினைவுப்பிசகா இப்பிடி இருந்திருந்தா... இந்நேரம் ...?' எதையோ நினைத்தாள். எதுவோ தோன்றிற்று.

சொறிநாய் ஒன்று ஓடி மறித்தது. விலகியது. மடத்துக்குளம், சாம்பான் பள்ளம், வாணியன் செக்கடி-இப்படி. பகுதிகள் விலகின.

சங்கரன் குடியிருப்பு பின் தங்கியது!

பொன்னாயின் பதட்டத்தைக் கண்டு கொள்ளாதவளாக, அடி வைத்து அடி மிதித்து நடந்தாள். விழிதேய, வழி வளர்ந்தது. விழி துயில, விழி விழித்தது.

சிரித்தும் சினந்தும் ஊராண்ட ஆத்தா காட்டேறிக்கு அஞ்சலி செலுத்தி நடந்தார்கள்!...



ங்காணித் தோட்டம் வந்தது. தோட்டத்தின் தலைப்பை மிதித்ததும் தீயை மிதித்தவளையொப்ப தைலம்மை ஏன் அவ்வாறு நடுங்கினாள்?...

"தைலி, என்னடி அப்பிடியே நிலை குத்தி நின்னுப் புட்டே?"

பிடரியில் குந்திய கேள்வி, தைலம்மைக்குச் சுயப் பிரக்ஞையின் பிடரியைத் தட்டியதோ?

"ஒண்ணுமில்லியே!.."

சொற்களின் தடுமாற்றம் அவளைக் காட்டிக் கொடுக்க வில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/13&oldid=1386086" இலிருந்து மீள்விக்கப்பட்டது