பக்கம்:களத்துமேடு.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

களத்து மேடு


ஏதோ சிந்தனை வசப்பட்டிருந்த சிங்காரம் குரல் கேட்டுத் திரும்பி, விழிகளைத் திருப்பித் தைலம்மையை ஏறிட்டுப் பார்த்தான்; பார்த்த சடுதியிலேயே பார்வையைத் தாழ்த்திக் கொண்டான். “நான் வந்து குந்தி வீசம் நாழி கூட ஆகியிருக்காது, அம்மான் மவளே!” என்றான்.

“நல்லவேளை”, என்று சொல்லிக் கொண்டு அவள் நிலைப்படியைத் தாண்டி உட்புறம் சென்றாள். உள்ளே சென்றவள் வெளிப்புறம் மீண்டபோது, சின்னாளம்பட்டிப் பச்சைச் சேலையும் தட்டுமறித்த ஊதா ரவிக்கையும் அவள் மேனியை அலங்கரித்திருந்தன. நெற்றித் திட்டில் பொட்டு ஒளிர்ந்தது. காதுச் சிமிக்கிகளைத் துடைத்த வண்ணம் வந்து நின்றாள் அக்கன்னி. அவளுக்குச் சடங்கு சுற்றிய விசேஷத்துக்கு எடுத்திருந்தது அந்தப் பட்டும் ரவிக்கையும் 'இந்த அயித்தை மவன் அண்ணிக்கு இருந்திருந்தாக்க, அவுக அயித்தை வீட்டு உலுப்பை வச்சிருக்க வேண்டியது. எப்படியோ அல்லாம் மாறியிருச்சு!’

என்றும் அவள் எண்ணிக் கொண்டாள்.

“பழையது சாப்பிட வாங்க, அயித்தை மகனே!” என்று கூப்பிட்டாள் தைலி.

அருகிலிருந்த பையை நோட்டம் பதித்தவாறு இருந்த சிங்காரம், “இந்தாலே வாரேன்,” என்று கூறினான்.

அவள் விரைவுடன் உள்ளே சென்றாள், கொல்லையிலிருந்த ஆடுதுறை வாழை மரத்தில் ஒர் இலையைக் கிள்ளி வந்தாள்; கழுவினாள். நடையில் இலையைப் போட்டாள். கஞ்சியைப் பிழிந்து வைத்தாள். ஈயக் குவளையில் பசு மோரைக் கொணர்ந்தாள். உப்புக்கல் வந்தது; ‘சுண்டல் சாகம்’ வைத்தாள். வறுத்த குட்மிளகாய்களைப் பரப்பி னாள். குளியலுக்குப் போகுமுன் பொரித்து வைத்திருந்த நித்திலிப் பொடிகளையும் இட்டாள். பிறகு, மீண்டும் வெளியே வந்தாள்; அழைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/135&oldid=1386089" இலிருந்து மீள்விக்கப்பட்டது