பக்கம்:களத்துமேடு.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

131


அவன் உப்புக்கல்லைத் தூவிப் பிசைந்தான். சாப்பிடத் தொடங்கினான்.

“நீ சாப்பிடலையா?”

“நீங்க சாப்பிடுங்க. அப்புறம் நான் சாப்புடுறேன். சுடுசோறு உங்களுக்கு ஆக்கவேணுமே!” என்று கூறியபடி, அடுப்படியை அடைந்தாள்.

எலிகள் முண்டியடித்து ஓடின.

‘மூசுமூசு’என்று அவன் சாப்பிட்டு முடித்தான், கையலம்புவதற்கு எழும்ப மறந்து, பலத்த ஆலோசனையின் வசப்பட்டான். பராக்கு பார்த்தபடி இருந்தான். சிந்தனை தெளிந்ததும் எழுந்து கை கழுவினான் சிங்காரம், கைகளைத் துவாலையால் துடைத்துக் கொண்டு தோளில் போட்டுக் கொண்டு, பொட்டலத்தைப் பிரித்து இத்தி புகையிலையை எடுத்துக் கடை வாயில் அடக்கிக் கொண்டான். தன்னைத்தானே ஒருதரம் பார்த்தான். தன்னைத் தானே சுயப்பரிசோதனை ரீதியில் பார்த்தான். சில நாழிப் பொழுதுக்கு முந்தி களத்துமேட்டில் நடந்த சம்பிரதாயப் பேச்சு வார்த்தைகள் அவன் மனத்துள் எதிரொலித்தன. பிறகு அவன் தன் பையைத் தொட்டான். அது அவன் உள்ளத்தைத் தொட்டதுபோலும் ஆழ்ந்த பெருமூச்சு வெட்டிப் பாய்ந்தது. 'தைலி!' என்று ஒரு முறை விசையுடன் அந்தப் பெயரை உச்சரித்தான். இன்பச் சிரிப்பு அவனது உதடுகளில் கரை சேர்ந்தது. வெக்கை தாளவில்லை. சொக்காயைத் தளர்த்திவிட்டுக் கொண்டான்.

தைலம்மை வந்தாள். அவளுடன் அவளது லகஷ்மீகரமும் வந்தது.

“தைலி, மதியத்துக்கு எனக்கும் சேர்த்து உலையிலே அரிசி போடவேணாம். நான் சிலட்டூர்வரைக்கும் போய்த் திரும்பலாம்னு ரோசிச்சிருக்கேன்!” என்று தெரிவிப்புக் கொடுத்தான் சிங்காரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/138&oldid=1386111" இலிருந்து மீள்விக்கப்பட்டது