பக்கம்:களத்துமேடு.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

களத்து மேடு


“போறதை சாப்பிட்டுப்புட்டுப் போங்கங்கிறேன். அயித்தைமவனே! இது எப்பவும் ஒங்க ஆடுதான். திரும்பத் திரும்ப நான் ஒங்களுக்கு யாபகப்படுத்துறது அவ்வளவு உசிதமாயிருக்காதுங்க!” என்றாள் தைலம்மை, மென் குரலில்.

“இந்த மட்டுக்கும் நீ எம்பேரிலே பாசம் வச்சிருக்கிறது நான் செஞ்ச பூசா பலன்தான்!...சரி, நான் விசயத்துக்கு வாரேன்!”

“சொல்லுங்க நெஞ்சிலே குந்தியிருக்கிறதை!”

“ஒனக்கு காலைப் பொழுதிலே களத்துமேட்டுப் பக்கமா நடந்த சங்கதி ஏதுனாச்சும் காதுக்கு எட்டுச்சா? ஊர்க்காட்டிலே யாரானும் ஒடியாந்து ஒங்காதைக் கடிச்சிருப்பாங்களே?” என்று விசாரிப்புச் செய்தான் தைலியின் அத்தை பிள்ளை.

“சேதி விழல்லீங்க!”

“அதிசயக் கூத்தாயிருக்குதே?”

“சேதியையும் நடப்பையும் நானே நேருக்குநேராக் கண்டறிஞ்சேனுங்க. களத்துமேட்டுப் பக்கத்திலே உள்ள சீரங்கத்தம்மா ஆட்டிலே குந்திக்கினு அல்லாத்தையும் கேட்டுக் கிட்டேனுங்க!...”

“அப்படியா?”

“ஊம்! ஒரு பொண்ணு உசிருக்குசிரான சேக்காளிங்க ரெண்டு பேருக்குள்ளேயும் ஒருதவசலை உண்டாக்கி வேடிக்கை பார்த்த கதையை-வேடிக்கை காட்டின நடப்பைப்-பார்த்தேனுங்க!”


“நான் சிநேகிதத்தை உசிராய் மதிக்கிறவன்; அதே நேரத்திலே என்னோட மனசிலே வளர்த்து வாழ்த்திக்கிட்டு இருக்கிற நேசத்தையும் உசிராய் மதிக்கிறவன், அம்மான் பெத்த தவமே!” என்றான் சிங்காரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/139&oldid=1386115" இலிருந்து மீள்விக்கப்பட்டது