பக்கம்:களத்துமேடு.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

களத்து மேடு

 “நீங்க ஒண்னுங்க, எசமான்!...” “நானு இப்ப ஒண்னுதானே? அதான் எங்கூடப் பொறந்தவன் வெட்டிக்கிட்டு ஒதுங்கிட்டானே? சரி, விசயத்துக்கு வா!”


“வந்துங்க உங்ககிட்டே அடகு வச்ச எம் பெஞ்சாதி வீட்டு தாலியைத் திருப்பிக்கிட்டுப் போக வந்திருக்கேணுங்க!” என்று வருத்தம் தொனிக்க உரைத்தான் உடையப்பன்.

“ஒரு வருஷக் கெடு கேட்டிருந்தியே ?”

“உள்ளதுதானுங்க, ஐயா. ஆனா, இப்ப என் சம்சாரம் கெடு தப்பியிடும்போல ஒரு இக் கட்டு வந்திருச்சிங்க. அவளுக்கு ரொம்ப தக்கா முக்கியா இருக்குது. அவ பூவும் மஞ்சளுமாப் போக ஆசைப்படுறா. கட்டின தாலி கழுத்திலே இருக்கவேணும்னு துடிக்கிறா. ஆவ கடைசி விருப்பத்தை நிறைவேத்த வேண்டாமுங்களா?”

“அப்படின்னா, என் வட்டி தண்ணியிலே போயிடுறதா ?”

“கணக்குப் போட்டு எடுத்துக்கிடுங்களேன்!”

“அப்படி வா வழிக்கு!” என்று அட்டகாசமாகச் சிரித்த படி உள்ளே சென்றார்.

திரும்புகையில் அவர் கையில் தாலிப் பொட்டும் சிறிய சிட்டைக் குறிப்பும் இருந்தது. விரல்களை மடக்கிப்புள்ளி போட்டார். மனக்கணக்குப் போடும் நிலை. "நீ அடகுவச்சு மாசம் வள்ளிசா நாலு முடிஞ்சுது. ஆனா, நம்ப பேச்சுப் படிக்கு ஒரு வருஷத்து வட்டி கணக்குப் போட்டு, எல்லாம் சேர்த்தால் எம்பது ரூபாயும் அரையே அரைக்கா ருபாயும் வருது. காசுப்படி, அரையே அரைக்காலுக்கு அறுபத்தி முனு காசு ஆகுது. சில்லறை ரெண்டு காசு தேட வாய்க்காது. அறுபத்தஞ்சு காசாத்தான் குடுத்துப்புடுடா, உடையா!" என்று குளிப்பாட்டிப் பேசினார் பெரியவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/149&oldid=1386242" இலிருந்து மீள்விக்கப்பட்டது