பக்கம்:களத்துமேடு.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

களத்து மேடு

‘ஊம்’ கொட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் சேர்வை, குடுமி அவிழ்ந்து விழுந்ததுகூட அவருக்குப் புலனாகக் காணோம்.

தைலி புடவையைக் களைந்து மாற்றிக் கொண்டு, உலை வைக்கலானாள்.

கோயில் நடப்பு நடந்து காட்டியது.

சுவாமிக்கு மாவிளக்குப் போட்டு, தேங்காய் உடைத்து சாமிகும்பிட்டுவிட்டுத் தந்தையுடன் கோயிலை வலம் வந்தாள் தைலம்மை, குனிந்த தலை நிமிரவில்லை.

அப்போது, கரக ஆட்டம் நடந்த இடத்திலிருந்து வந்தான் சரவணன். தைலியை அண்டினான். ஐந்து ரூபாய் நோட்டு, பழவகைகள், பூச்சரம் ஆகியவற்றை அவளிடம் நீட்டினான் அவன்.

சற்று நேரத்திற்குள், சிங்காரம் அங்கு தோன்றினான். அம்மாதிரியே அவனும் ஐந்து ரூபாய், பூ, பழதினசுகளை அவளிடம் நீட்டினான்.

அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள் தைலி. பிறகு, சோகப்புன்னகை பூத்து, “நீங்கரெண்டு பேரும் என்னைச் சமிச்சுப்புடுங்க!.... என்னைத் ‘தனது’ பண்ணுறதிலே உங்களிலே யாரும் இனிமே எண்ணம் கொள்ளப்புடாதுங்க!.... நான் கன்னிகழியாப் பொண்ணு! இந்த மாதிரி நடப்பு எனக்குக் கட்டோடு புடிக்கலை!... இந்தப் போட்டா போட்டி எதுக்கு? ஆத்தா சொல்லுற முடிவு ஒருநாளைக்குப் புரிஞ்சிடத் தானே போகுது!.... அப்பாலே ஆகட்டும் அல்லாம்!” என்று தீர்ப்பு வழங்கிவிட்டு நகர்ந்தாள் தைலம்மை. மகள் பேச்சு செங்காளியப்பன் சேர்வையின் வாயைக் கட்டிவிட்டதோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/155&oldid=1386259" இலிருந்து மீள்விக்கப்பட்டது