பக்கம்:களத்துமேடு.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

159

“ஆத்தா, நான் இம்பிட்டுப் பாடு படுறதெல்லாம் நான் போகையிலே அள்ளிக் கட்டிட்டுப் போகவா? 'அல்லாம் ஒனக்காகத்தானே?” என்றார் சேர்வை.

“அதெல்லாம் மெய்தாங்க. எனக்குத் தர்ம நியாயமாயுள்ள சொத்து கெடைச்சாப் போதுமுங்க. எனக்கு மாப்புள்ளையா வார ஆம்பளை வறளியா இருந்தாக்கூட, இருக்கிற சொத்து ரெண்டு தலைமுறைக்குப் பத்துமே!” தைலி பேசினாள்.

“உம் பேச்சு யதார்த்தப்படி சரிதான். அதுக்காக, பணம் வேணாம்னு சொல்லிப் போட வாய்க்குமா? பணம் தான் ஆத்தா, பந்தியிலே பேசும்! அந்தத் தைரியம் உலகத்திலே வேறே எதுக்கு இருக்குதாம்?” என்று குறுக்குச் சாலிட்டார் அனுபவஸ்தர்.

“அதுவும் சரிதானுங்க!....பணத்து அருமை ஒங்க மகளுக்குப் புரியாத ரகசியமில்லையே, அப்பாரே!”

“பலே, பலே! இப்பதான் என் வயிறு நெறைஞ்சிருக்கு!” என்று நிம்மதியாகச் சிரித்தார் சேர்வை.

“அப்பா, அப்பா! நீங்க ராச்சாப்பாடு உண்ணலை. மறந்துப்புடாதீங்க!” என்று சிரிக்காமல் சொன்னாள் தைலம்மை.

மகளின் சிரிப்பையும் சேர்த்து வட்டியும் முதலுமாகச் சிரித்தார் அக்கரைச் சீமை வீட்டுக்காரரான செங்காளி யப்பன்!

அடைக்கலங் குருவி ஒன்று ஒழுங்கை நெடுகக் கத்திக் கொண்டு பறந்து சென்றது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/160&oldid=1386289" இலிருந்து மீள்விக்கப்பட்டது