பக்கம்:களத்துமேடு.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

155


சரவணன் "சொகமா?" என்று கேட்டுவிட்டு ரேக்ளாவில் பறந்து விட்டான்! 'இந்த இளசும் ரோசக்காரருதான்!'

கோயிலில் அவள் சொன்ன எச்சரிக்கை மீண்டும் அவளுள் எதிரொலித்தது, '...என்னை தனது பண்ணுறதிலே உங்களிலே யாரும் இனிமே எண்ணம் கொள்ளப்புடாதுங்க......' என்ற அந்த அறிவிப்பு அவளைச் சிந்தனை வசப்படச் செய்தது. அரைக்கணம் மனம் அயர்ந்த நிலையில் அப்படியே குத்துக் கல்லாக நின்றாள். தனக்கு சரவணனும், சிங்காரமும் அளித்த புடவை ரவிக்கைகளைத் திருப்பிக் கொடுத்து விடவேண்டுமென்று தந்தையிடம் அவள் தெரிவித்த போது, "இதுகளைக் கொடுக்கவேண்டாம். அது அபசகுனமாயிருக்கும். உம்முடிவு அம்பலமானதும், அதுகளைப்பத்தி ரோசிச்சுக்கலாமே! ரெண்டு பேரிலே யாரோ ஒருத்தர் தந்ததை எப்படியும் நீ வச்சுக்கத்தானே வேணும்?" என்று வாதிட்டார். அதற்கும் அவள் ஒப்பவில்லை.

"இதிலே எனக்கு என்னமோ இப்ப இஷ்டம் இல்லே; சமாதானமுமில்லே!... நீங்க அவுக அவுக்கிட்டே இதுகளைக் குடுத்துப்பிடுங்க. எனக்கு யார் மாப்புள்ளை என்கிறது தெளிஞ்சடியும், இதைப்பத்தி ரோசிச்சுக்கிடலாம். அதான் சிலாக்கியம்!" என்று தைலம்மை சொல்லிவிடவே, அதன் பிரகாரமே அந்தப்புடவைகளை அவரவரிடம் சேர்ப்பித்தார் சேர்வை அவர்கள் மறு பேச்சாடாமல் வாங்கிக் கொண்ட விவரமும் அவருக்கு எட்டியது.

தைலம்மை கழிந்த கால நடப்பின் நினைவில் நின்று பெருமூச் செறிந்தாள்.


பொன்னாயி வேகமாக வந்தாள். கொஞ்சப் பொழுதுக்கு முந்தி அவள் வந்து நெல் கிண்டுவதற்காக வாசலைப் பெருக்கிவிட்டுச் சென்றிருந்தாள். "தைலி!" என்று பதட்டத்துடன் அலட்டிக் கொண்டு வந்து நின்றாள் பொன்னாயி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/162&oldid=1386133" இலிருந்து மீள்விக்கப்பட்டது