பக்கம்:களத்துமேடு.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

களத்து மேடு


"உங்க அப்பன்காரரோடே யாரோ ஒரு ஆளு சண்டை போட்டுக்கிட்டாங்க. உங்க அப்பாரு வச்சுக்கிட்டிருந்த செல்லாயிக்குச் சொந்தக்காரனாம். அந்தப் பொம்பளையோட பணத்தை உங்க அப்பாரு ஏப்பம் விட்டுப்புட்டாராம். அந்தத் தடயம் கட்டுக்கிட்டு மல்லுக்குப்புடிச்சிருக்கான். பேச்சு தடிச்சு, கை கலப்புகூட வந்திருச்சு. நல்ல வேளையா, சிலட்டூர்க்காரரும் உன் அயித்தை மவனும் கூறுக்கிட்டு, அந்தப்புது ஆள் சேக்கைப் பிடிச்சு முன் அறைபின் அறையா நல்ல வாங்கிப் புட்டாங்க!.... அந்த அசலூர்க்காரன் பிராது போடுறதாய் சொல்லிப்புட்டுப் போயிட்டான். நல்லகாலம் இந்த ஆளுங்க ரெண்டுபேரும் வந்தாங்க. இல்லாங்காட்டி, நிலைமை படுமோசமாயிருக்கும். வந்தவன் கோமாவரத்தான் கணக்கிலே இருந்தான். நாகுடிக்காரனாம்!..." என்றாள் அவள்.

"அப்பாருக்கு வேறே ஒண்ணும் இல்லையே?" என்று கவலை மூள விசாரித்தாள் தைலி.

"ஊஹூம்!"

"அப்பன்காரவுகளுக்கு இப்பிடித்தான் ஒவ்வொரு சள்ளை வருது!... இந்த மாதிரி ரெண்டொரு தாக்கலிலே தான் அவர்பேரிலே எனக்கும் கெட்டாப்பிலே ஆத்திரம் மூளுது!..." என்று வருந்தினாள் தைலம்மை.

"விட்டுத் தள்ளு சனியனை!" என்று சொல்லி நெல் கூடையைச் சுமந்துவர ஏகினாள் பொன்னாயி.

"இண்ணக்கி சந்தைக் கெடு வாச்சே?... அரிசி அரைக்க ஏலுமா?"

"அதுக்குத்தான் செட்டித் தெருவிலே ஒண்ணுக்கு ரெண்டா நெல்லு மிசினு இருக்குதே?..."

"சரி, சரி!"

சந்தைப் பேட்டையிலிருந்து பூவாயியின் தகப்பன் காய்கறி வாங்கித் திரும்பினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/163&oldid=1386136" இலிருந்து மீள்விக்கப்பட்டது