பக்கம்:களத்துமேடு.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

களத்து மேடு


உசார்ப் படுத்தலைன்னாக்கா!...ரெண்டுபேரும் ஆளுக்கு ஆளுஅவுக அவுக தன்னடச்சமூப்பாட்டம் என்னைக் கட்டிருக்கிடுறத்துக்குச் சம்பிராயம் கட்டிக்கிட்டாங்க. இதிலே மூலா தாரமாயிருக்கிற என்னைப்பத்தி அல்லது எம்புட்டு முடிவைப்பத்தி அந்த முடிவு யாரு பக்கம்சாயுது என்கிறத்தைப்பத்தி இத்தியாச்சம் அவுக ரெண்டுபேருக்கும் ஞாபகம் இருந்திருக்குமோ, என்னமோ?... சிந்தனைகள் சிதறின - களத்து மேட்டிலே மஞ்சிவெரட்டுக்காளை ஒண்னை வடசீமையிலேருந்து அப்பன் காரரைப் புடிச்சாரச் சொல்லி, அந்த மாட்டை - யாரு அடக்கி ஆளுவாகனோ அவுகளுக்கே நான் அப்படின்னு ஊர்ச்சாவடியிலே அம்பலப் படுத்தினா, இந்தச் சிக்கல் ஒரு நொடியிலே முடிச்சு அவுந்து பூடும். இதெல்லாம் வெறும் கதை!...பொன்னாயி சொன்னாப்பிலே, சுயவரம் கூட நடத்தலாம். அது, நம்ம செட்டித் தெரு அண்ணாச்சி எழுதுற கதை காரணத்துக்கு இணைஞ்சு வரும்!... இல்லாட்டி, ரெண்டு ஆம்பளைச் சிங்கங்களையும் கூப்புட்டு, யாரு புலிப்பால் கொண்டாராங்களோ, அவுகளைத்தான் நான் ஒப்புக்கிடுவேன்னு சொல்லலாமே! இது பயாஸ்கோப்புக்கு ஏத்தது! ம்...!'

தன்னையும் மீறிய விதத்தில் அவள் சிந்தனை வசப்பட்டாள். தனக்குத்தானே எழுந்து முடிந்ததொரு தீர்மானமாக, ஒரு கணம் அர்த்தமுள்ள புன்முறுவலை ஏந்தினாள் இமைப்பொழுதுக்கு முந்தி தன்னுள் தோன்றிய உபாயங்கள் கூட அவளுக்கு இப்பொழுது அசம்பாவிதமான ஞாபகமாகப்பட்டது. கோயில் நிகழ்ச்சிக்குப் பிற்பாடு சரவணனோ, சிங்காரமோ, தன்னைச் சந்திக்காத தன்மையை நேர்மைக்கு எடுத்துக்காட்டாகவே அவள் கணித்தாள். ஆனால் அந்த நேரிய தன்மைகூட தன்னுள் இனம் புரியாத தவிப்பை உள்ளடக்கிக் காட்டி வந்த விந்தையையும் அவளது மனத்தின் மனம் உணர்த்திக் காட்டத் தப்பவில்லை என்ற யதார்த்தத்தையும் அவள் உணராமலும் இல்லையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/175&oldid=1386190" இலிருந்து மீள்விக்கப்பட்டது