பக்கம்:களத்துமேடு.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

169


கதிரவன் இறங்கு முகத்தில் இருந்தான்.

வடிதட்டில் சோற்றை வடித்துக் கவிழ்த்தாள் தைலம்மை. ஒருகால் மச்சம் ஏதாகிலும் தன் தந்தை வளமைப்படி வாங்கி வரக் கூடுமென்ற நினைப்பில் மிளகாய் அறைத்துத் தயார்ப் படுத்தி வைத்தாள். அடுப்பிலிருந்த எரிந்த பனைமட்டையை வெளியே தள்ளிக் கொஞ்சம் தண்ணீரை அதில் தெளித்தாள். அடுப்படியை விட்டு வெளியேறினாள்.

அப்பொழுது, சேர்வை கொடுவாய்ச் செங்கணி மீன்கள் நான்கு வாங்கி வந்தார். "ஆத்தா, இதுகளை ஆக்கு," என்று வெகு தன்மையுடன் சொன்னார். பழைய கோபம் அற்றவராகவே அவர் காணப்பட்டார்.

"ஆகட்டுமுங்க", என்றாள் தைலி. தந்தையின் சரளமான பாசக் கனிவு அவளுக்கு அளவற்றை ஆறுதலைக் கொடுத்தது. மீன்களைப் பதப்படுத்துவதில் முனைந்தாள் அவள்.

"ஆத்தா, மறுதக்கமும் உஞ்சித் தப்பன் சிலட்டூர்க் காரகளைக் கண்டு தண்டியிருக்கானாம். சிங்காரத்தையும் கலந்திருக்கானாம். முந்தின கடுத்தத்திலே, உம்முடிவு கண்டுதான் எப்பேச்சுமின்னு சொன்ன அந்தப் புள்ளைங்க இப்ப கொஞ்சம் மேலேறிப் பேசியிருக்காங்களாம்! வாழ்ந்தா, எங்க தைலியோடதான் வாழ்வு, இல்லாட்டி வாழ்வே இல்லைன்னு ஒவ்வொருத்தரும் தனித்தனியா, ஒருத்தர் சொன்னது இன்னொருத்தருக்குத் தெரியாத வகையிலே தண்டு முறிச்சுச் சொல்லிட்டாகளாம்... பாவம், தம்பியாண்டானுக்குத் தலை கிறுகிறுத்துப் போச்சாம்!... ம்... இதுகளை நினைச்சாக்க, இப்ப எனக்கும்கூட தலை சுத்திக்கிட்டு வருது.... ஒன்னையும் அந்த மாப்புள்ளைங்க ரெண்டு பேரையும் சுத்திக்கிணு இந்தப்பாளத்த விதி என்னமாய்க் கூத்து நடத்துது, பார்த்தியா?" என்றார் சேர்வை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/176&oldid=1386201" இலிருந்து மீள்விக்கப்பட்டது