பக்கம்:களத்துமேடு.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

171


மனம் இல்லாமல், சற்று நேரம் நின்றது நின்ற நிலையில் நின்றாள் பிறகு, உள்ளே அடியெடுத்து வைத்தாள்.

உள்ளே நடையில் பழைய கந்தாயங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார் செங்காளியப்பன் சேர்வை.

"அப்பா!?" என்றாள் தைலம்மை.

"என்ன ஆத்தா?" என்றார் சேர்வை.

"எங் கையாலே கஞ்சி - குடிக்கிறீங்களா?" என்று அன்பின் பரிவுடன் கேட்டாள் மகள்.

ஏனோ மகளைப் பதட்டத்துடன் உற்று நோக்கினார் தந்தை.

தைலியின் நெற்றியில் பளிச்சிட்ட திருநீற்றுப்பட்டை அவருக்கு என்ன சொல்லிக் காட்டியதோ, என்னவோ?

அவள் புனிதம் மண்டிய இளநகை சிந்தி நின்றாள். அச்சிரிப்பில் கற்பின் திண்மை விளையாடிக் கொண்டேயிருந்தது!

"ஆத்தா, உம்பேச்சு என்னமோ புதிராட்டம் தென்படுதே?.. ஒன் தங்கக்கையாலேதானே தெனமும் எனக்கு நீ கஞ்சி ஊத்துறே? என்னமோ, என்னை விட்டுப்புட்டு தேசாந்தரம் போற சாடையிலே நீ பேசுறீயே? என்னை விட்டுப்புட்டு-என்னைத் தவிக்க விட்டுப்புட்டு - நீ எங்கிட்டும் போயிடாதே, ஆத்தா!" என்று தேம்பினார் அவர்.

"நீங்க என்ன அப்பா, என்னென்னமோ பேசுறீங்களே? நான் எதுக்கு எங்கேயும் போகப் போறேன்?...சாதாரணமாக கேட்டேன், எங்கையாலே கஞ்சி குடிக்கிறீங்களான்னு! மனுசக் காயம் என்னா நிச்சயமுங்க?... நீங்க எப்பவும் நம்ம குடும்பத்துப் பேரைக் காப்பாத்தி வச்சுப்புடுங்க. அது போதும்! என்னாலே நம்ம குடும்பப் பேரு ஓங்கத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/178&oldid=1386219" இலிருந்து மீள்விக்கப்பட்டது