பக்கம்:களத்துமேடு.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

களத்து மேடு

ஓங்கும்!....இதை நீங்க எப்பவுமே நம்பலாமுங்க!" என்று தாழ் குரலெடுத்து உரைத்தாள் கன்னிப் பூ தைலம்மை.

"அது ஊரறிஞ்ச உண்மை ஆச்சே, ஆத்தா?... நீ தங்கக் கட்டியாச்சே? ... இன்னொண்ணையும் சொல்லோணும். நேத்தைக்கு ஊர்ச் சாவடிப்பக்கம் காலாற நடந்துக்கிட்டு இருந்தேன். ரெண்டு மூணு இளவட்டங்க கூட நம்பவூட்டுச் சம்பந்தத்தை விரும்புறதாச் சாடை தெரிஞ்சுது!.."

"அதையெல்லாம் இப்ப நெனைக்க வேண்டாமுங்க!... என் விதி எந்தலையிலே என்னா எழுதி வைச்சுருக்குதோ, அது ஆத்தா காட்டேறிக்குத்தானே புரியுமுங்க? மேலும், எனக்குன்னு ஒரு மாப்பிள்ளையை இந்த மண்ணிலே ஆத்தா புடிச்சுப்போட்டுத் தானே இருப்பா?...."

"அதான் மெய்யாச்சே!... இன்னொண்ணுகூட தோணுது எனக்கு! சொல்லட்டா, தைலி?"

"தாரளமாகச் சொல்லுங்க!"

"இன்னும் இடை நட்டிலே ஒரு நாளுதான் இருக்கு. இப்ப நீயும் நானும் லோகமாதா சந்நதிக்குப் போவோம். போயி, போட்டி போடுற மாப்புள்ளைங்க சரவணன், சிங்காரம் ரெண்டு பேர் பேரையும் ஒரு துண்டுக் கடுதாசியிலே எழுதி திருவுளச்சீட்டுக் குலுக்கிப் போடுவோம். ஒரு புள்ளையை விட்டு அது ரெண்டிலே ஒண்ணை எடுக்கச் சொல்லுவோம். யாருபேரை ஆத்தா தீர்ப்புச் சொல்லுதோ, அதுப்படி அந்த மாப்புள்ளையையே மச்சானாய் ஏத்துக்கிடலாமே?" என்று நிறுத்தினார் சேர்வை.

ஏறு முகக்கதிர்கள் தைலியின் முகவெளியில் ஒயிலாக அளைந்தன. அவள் கண்கள் ஏன் அப்படிக் கலங்கின? அவள் மறுகணம் நெஞ்சை அழுந்தப் பிடித்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு, பற்களைக் கடித்துக் கொண்டு அப்படியே நின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/179&oldid=1386225" இலிருந்து மீள்விக்கப்பட்டது