பக்கம்:களத்துமேடு.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

களத்து மேடு


கஷ்டம் பத்தாதின்னு பாம்பு வேறே தைலியைக் கடிச்சிட்டுதுபோலேத் தோணுதே?" என்று பொன்னாயி கூச்சலிட்டதும் விழுந்தது. "ஆ!" என்ற அலறலொலி ஏக காலத்தில் அவர்கள் இருவரது உந்திக் கமலங்களையும் விட்டு எழுந்து விழுந்தது. மூச்சமுட்ட வந்து நின்றவர்கள் ஒருகணம் அந்தப் பாம்பைக் கவனித்தார்கள்.

அந்தப் பாம்பு தைலம்மையின் மேனியை வளைத்து ஊர்ந்து அவளது தலைமாட்டில் அழகாகப் படம் விரித்தது.

ஆம்; சத்தியத்தின் தரிசனம் அது!

கையெடுத்துக் கும்பிட்டார்கள் சரவணனும் சிங்காரமும்.

"எங்க தைலியைக் காப்பாத்து நாகம்மாதாயி!" என்று கும்பிட்டாள் பொன்னாயி.

பாம்பு தலையைத் தரையில் பதித்துக் கொண்டு தைலம்மையை ஒருமுறை பார்த்துவிட்டு மண்ணில் ஊர்ந்தது.

கூட்டம் களத்துமேட்டில் நெரியத் தலைப்பட்டது.

பூங்காவனம் விம்மினாள்!

தைலம்மை மூடிய கண்களைத் திறக்காமல், சுயநினைவற்று, மயக்க நிலையில் சவம் போலக் கிடந்தாள். மண்டைக் குருதி நிற்கவில்லை; வழிந்து கொண்டேயிருந்தது.

தலையின் கொண்டைப்பூக்களும் படர்ந்திருந்த தும்பைப் பூக்களும் ரத்தக் கண்ணீர் சொரிந்தன.

ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்து தைலியை நோக்கினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/185&oldid=1386266" இலிருந்து மீள்விக்கப்பட்டது