பக்கம்:களத்துமேடு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

களத்து மேடு

தாள். சோற்றுக் கையை உதடுகளின் ஒரத்தே பொருத்தி வசமாக அலட்டினாள்.

ஆலத்தம்பாடிக் காளை இடது கால்களை ‘கெந்தி’ நடந்தது. அதை இப்போது பார்த்து மருந்திட்டார். செவலைக்கு உண்ணிகள் மிஞ்சிக்கிடந்தன. ஓட்டினார். ஓடவில்லை அவை; ஓட்டின; ரத்தப்பசையை உறிஞ்சி நப்புக் கொட்டியவாறு ஓட்டிவிட்டன. பிறர் சொத்தை தெய்வத்திற்குக்கூட அஞ்சாமல், நயவஞ்சனையாக ஏப்பமிட்ட ஒருவன், தான் மேலும் மேலும் உயர்ந்து செல்வதை அறிந்து எக்காளமிட்டுச் சிரித்து, அத்துடன் நில்லாமல் தன்னைப் படைத்தத் தெய்வத்தையே ஏளனம் செய்தபடி, இன்னும் தொடர்ந்து தீமைகள் செய்வதிலேயே கருத்துக் கொள்வதைப் போலத்தான் இந்த உண்ணிகளின் போக்கும் இருந்தது. அயலவன் பொருளுக்குப் பேயாசையுடன் பேராசைப்படும் இந்த மனித உண்ணிகளுக்குத் தண்டனை என்ற ஒரு முடிவு காலத்தின் கரங்களில் மறைந்திருக்கும் ரகசியம் எங்ஙனம் தெரிய முடியும் ? அந்த ரகசியம்தானே வாழ்க்கையின் மந்திரம் அதுதானே சிருஷ்டியின் அந்தரங்கம்!

“அப்பாரே!”

உடுக்களைச் சுற்றி விளையாடி நீந்தியது நிலவு.

“இந்தாலே வாரேன், ஆத்தா!”

வடக்கு முக்கத்தில் ஆவாரஞ் செடி ஒண்டலில் இருந்த முட்டியைக் கவிழ்த்தார் சேர்வை. முட்டின்றி வழிந்தது. நீர் துவாலையால் முகம், கை, கால்களைத் துடைத்தார். “விபூதிக் கொட்டுக் கடையைக் கொண்டாம்மா” என்றார். திருநீறு வந்தது, மூன்று பட்டைகள் விழுந்தன. தாயே பராபரி...அப்பனே!’ முனகிக் கொண்டே மூன்றாம் பயணமாக விபூதியை வாயில் போட்டுக் கொண்டார். குடுமியைத் தட்டி விட்டுக் கொண்டு உள்ளே மடங்கினார். வயதை ஒளித்த அவரது நடையில்தான் எத்தனை மிடுக்கு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/21&oldid=1385830" இலிருந்து மீள்விக்கப்பட்டது