பக்கம்:களத்துமேடு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

15

‘பொண்ணு ஒண்னு கண்ணாளத்துக்கு நின்னாக்க, அதாலே கண்டு ஒனக்கு வயசு கூடிப்பிட்டுதின்னு பல்லு மேலே பல்லு போட்டு யாராச்சும் செப்ப வாய்க்குமா?’ என்று நடேச அம்பலம் ‘ஆறுதலைக் கட்டுப் பஞ்சாயம்’ ஒன்றில் அம்பலப் படுத்தவில்லையா?-சேர்வை என்றால் சேர்வை தான்! வயசு அறுபதுக்கு மிதந்ததே?

வட்டி, வட்டியும் முதலுமாகக் கொடுத்தது போலும்! எடுத்துக்கொண்டார் செங்காளியப்பன். அதன் விளைவாகவே, ஏப்பங்கள் கூடின. உண்ட மயக்கம் கூடியது, செம்மறிக் கிடையைப் பூட்டிப்புட்டு, எல்லாக் கதவையும் நாதாங்கி போட்டுப்புட்டு, சாப்பிட்டு ஆனதும் படுத்துக்கதைலி! எனக்குத் தூக்கம் அசத்தது!...” நூவரெலியாச் சுருட்டுடன் வாசலில் கிடந்த நார்க் கட்டிலில் வந்து சாய்ந்தார். வேப்பமர இலைகள் சாய்ந்தாடின.

தகப்பன் உறக்கத்தின் கால்களிலே சரண் புகுந்ததை அறிந்தாள் மகள். அவள் பாதங்களிலே பசி அடைக்கலம் புகுந்தது.

தைலம்மை வட்டிலின் முன்னே குந்தினாள். வலது காலை மடக்கியும் இடது காலை உயர்த்தியும் குந்தியிருந்தாள். சோற்றில் குழம்பை ஊற்றினாள். ‘சாகத்தட்டு’ நிரம்பியது. கை விளக்கை நகர்த்தியது கை, ஒரு கவளம் அள்ளிப் போட்டாள். ஒரு நினைவு வந்தது.

அந்த ஒரு நினைவு!

ஆவணத்தான் கோட்டை தேரோட்டம் அன்று. ஊர் விழாக்கோலம் பூண்டிருந்த நேரம், உறவும் பாசமும் முயங்கித் திளைத்த வேளை. தைலம்மை கனவின் வடிவமாக நீர் கொணரப் புறப்பட்டாள். கங்காணித் தோட்டத்துக் கேணிக்கு நடந்தாள். கனிவுகளுடன் நடந்தாள்; ஆசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/22&oldid=1385856" இலிருந்து மீள்விக்கப்பட்டது