பக்கம்:களத்துமேடு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதிர்க் கொத்து 3

சேக்காளி சிங்காரம்!

புவனத்தைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்த செஞ்சுடர்க் கோமான் அப்பொழுது சங்கரன் குடியிருப்பு செங்காளியப்பன் சேர்வைகாரரையும் சிலட்டூர்ச் சரவணனையும் சுற்றி விளையாட்டு காட்டிக்கொண்டிருந்த விந்தையான நேரம் அது? திருக்கைவால் கட்டிய தார்க்குச்சியை லாகவமாகச் சுழற்றி, சிலம்பம் விளையாட்டுப்பாணியில் ஒரு 'மடங்கு' அமைத்து, பிறகு கீழ்வசமாகத் தாழ்த்தி, இடுப்பில் செருகிக் கொண்டான், சரவணன். குணதிசை நோக்கி நின்றவனின் கண்கள் கூசின. கதிர் முத்தங்கள் அவனை அவ்வாறு செய்தன. அவன் 'லேஞ்சை'ப் பிரித்து முண்டாசை அவிழ்த்தான். தடுமனுக்கு சாம்பிராணிப் புகைப் பிடிக்கையில் நெற்றித் தனம் வேர்வைக்குளமாகுமே அதன் பாங்கிலே, அவனுடைய நெற்றியில் வேர்வை கொட்டியது. பாங்குற அமைந்திருந்த புருவ விளிம்புகள் லேசாக நடுங்கிச் சுழித்தன. அவன் முகத்தைத் துடைத்துக் கொள்வதற்கும், மறுவினாடி ஒரு தும்மல் போடுவதற்கும் கச்சிதமாக இருந்தது.

சேர்வை, கொட்டடியில் நின்று தண்ணீர்த் தொட்டியை நக்கிக் கொண்டிருந்த காளைகளைக் கண்டதும், உள்ளே தாழ்வாரத்தில் பிரப்பங் கூடையிலிருந்த பிண்ணாக்குத் துணுக்குகளை எடுத்து வந்து தொட்டியில் பிட்டுப் போட்டார்; கழு நீரை இரண்டு வாளி எடுத்து வந்து கொட்டினார்; பதக்குத் தவிட்டையும் தூவினார். குச்சியால் கலக்கி விட்டார்.

இப்போது மாடுகளுக்குக் கொண்டாட்டம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/31&oldid=1386409" இலிருந்து மீள்விக்கப்பட்டது