பக்கம்:களத்துமேடு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

25


"ஆமாங்கறேன்... நானும் பேச்சு பராக்கிலே ஓதிய மரமாட்டம் நின்னுகிட்டேயிருக்கேனே, நீங்க வந்த காலோட வசங்கெட்டு நின்று கிட்டிருக்கீகளே...! வாங்க.... வாங்க...! உள்ளாற.. நடைக்குப் போய்க் குந்துவம்!......" என்றார் சேர்வை.

அதுசமயம், சரவணனின் பார்வை உள்ளே வலை விரித்ததை அறிந்த சேர்வை எதையும் கண்டு கொள்ளாதவராக, "வந்து... இப்ப போச்சில்ல...அதானுங்க எம் பொண்ணு. நீங்கதான் அதை ஒரு நடை எப்பவோ எங்கணயோ பார்த்திருக்கிறதாச் சொன்னீங்களே! இல்லாங்காட்டி, நீங்களாவது இந்தச் சம்மந்தத்துக்கு மனசு ஒப்புறதாவது! சரி... நடங்கங்கிறேன்!..." என்று சிரிப்பும் பேச்சுமாக வெளியிட்டவாறு முன்னே வழிகாட்டி, மச்சுப்படியில் இருந்த அமராப்பூராப் பாயை எடுத்து விரித்தார்.

"குந்துங்க!"

"ம்!"

உட்கார்ந்தான் சரவணன். சுற்றிச் சூழ நோக்கினான். உச்சியில் வேயப்பட்டிருந்த சீமை ஓடுகள் கரிதட்டிப் போயிருந்தன. ஒட்டுச் சுவர்கள் ஒட்டாமல் நின்றன. கூடு விட்டுக் கூடு பாய்ந்த அவனது கண்கள் அவனையும் அறியாமல் கொல்லை அடுப்படிக்குத் தாவி ஓடின. விழிகள் தம் இணையினைத் தேடினவோ?... 'கொஞ்ச முந்தி வந்த நான், வந்த சூட்டோடவே அந்த மரத்து ஒண்டலிலே ஒளிஞ்சிக்கிட்டிருந்தாக்க, மறுகடுத்தமும் அந்தக்குட்டியை நேருத்தரமாப் பார்க்கிறதொப்ப பார்த்திருக்க ஏலுமே!...ம்.... அதால என்னாவாம்?...கிணத்துத் தண்ணியை வெள்ளமா கொண்டு போயிடப் போவுது?...தைலம்மை உண்டன சூட்டிகைதான்! இல்லாக்காட்டி, 'வாங்க' அப்படின்னு என்னை உபசரித்திருக்க ஏலுமா?...' என்ற எண்ண ஓட்டம் அவனை வளைத்தது. அவன் விழிகளை வளைத்துச் சுழற்ற எண்ணிய அந்தப் பேசும் விழிகளை அவனால் சந்திக்க முடியவில்லை, அப்போதைக்கு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/32&oldid=1386424" இலிருந்து மீள்விக்கப்பட்டது