பக்கம்:களத்துமேடு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

35

“இந்தாபாருங்க! ஒண்னு மட்டும் கச்சிதமுங்க!..... நம்ம நேரு மவராசன் இருக்குந்தொட்டியும் நம்ம மண்ணை அசலான் எந்தப்பயமவனும் எப்பவும் துணிஞ்சு இத்தி கூட எடுத்துக்கிட வாய்க்காதுங்க..... அந்த மாணிக்கத் தலைவருக்கு ஒருவேளை எதுணாச்சும் வந்து ஏடா கூடமா விதி முடிஞ்சுட்டாக்கூட, அதுக்குப் பொறகு, நேருசாமி வழி நடக்கிறத்துக்கு நம்ம நாட்டிலே கைவீச்சுக்கு மேலேகூட உண்மையான தியாகத் தலைவர் மாருங்க இருக்காங்க!..... அதாலே, சப்பை மூக்குகாரப் பனாதிங்களைப்பத்தி தவளைகளை விழுங்கிற தூத்தேரிங்களைப்பத்தி நாடி அஞ்சவே தேவையில்லிங்க !...”

நாட்டுப் பற்றின் உண்மையான தேசிய உணர்ச்சிகள் சரவணனின் இதழ்கள் வழியே மடைதிறந்து பாய்ந்தன.

சாயாக்கடை மூக்கின்மீது விரல் வைத்தது.

கூடியிருந்தவர்கள் கைகூப்பி வழியனுப்பி வைக்க, சரவணன் நடந்தான். பூவத்தக்குடி மஞ்சிவிரட்டுப் பொட்டலைத் தாண்டியிருப்பான். “சரவணா” என்று வெகு சுவாதீனமாக ஏகவசனத்தில் கூப்பாடு போட்டபடி ஒரு குரல் மிதந்து வந்தது.

சரவணன் திரும்பினான். “யாருங்க?...” என்று ‘சம்சயம்’ மிளிரக் கேட்டான். என்ன இன்னிக்கு ஒரே கூப்பாடு மயமாய்போச்சு?”

“நான் உன்னோட சேக்காளி சிங்காரம்! அக்கரைச் சீமையிலே பர்மா பக்கத்திலேருந்து கப்பலேறி வந்திருக்கேன் இப்பத்தான் வந்தேன். இங்கணே எங்க சொந்தம் சோவாரிக்க ரவுக அதிகப் பேர் இருக்காங்க!...” என்றான்.

பாசம் வழிந்தது.

சரவணன் இன்னமும் அந்த ஆளை நறுவிசாக ‘இனம்’ கண்டுகொள்ளக்கூடவில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/42&oldid=1386346" இலிருந்து மீள்விக்கப்பட்டது