பக்கம்:களத்துமேடு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

களத்து மேடு

“என்னப்பா இது?...உப்புக்கோடு மறிச்சு வெளையாடினோம்; கிட்டிப்புள்ளு அடிச்சோம்; மாங்கொட்டை போட்டோம்...... ஒங்க ஊரிலேதானே அப்ப எங்க அப்பத்தா இருந்துச்சு...நொண்டிக்கோயில் வட்டத்திலேதானே நாம ஆடிப்பாடினோம் !...”

சரவணனுக்கு நினைவு வந்துவிட்டது. “கம்மாய்க்கரையிலே மூச்சுமுட்டித் தத்தளிச்ச என்னை, உன் உசிரைக் கூட மதிக்காம ஆழத்திலே குதிச்சு காப்பாத்தினியே, அதைச் சொல்லாம, வேறே என்னத்தை யெல்லாமோ சொல்றியே சிங்காரம்?... ஒன்னை இப்பைக்கு அடையாளம் கண்டுக்கிட முடியாமல் முழிச்சாலும், ஒன்னோட அந்த அப்பழுக்கத்தி அன்பை நானு ஒரு நாளும் மறக்கவே மாட்டேன்! சிங்காரம்! வா...ஒரு சாயா குடிச்சிட்டுப் போவலாம் !......ஒரு கடுத்தம் எங்க வூட்டுக்கு வார். இப்ப நான் ஒரு அவசர சோலியா இங்கிட்டாலே நாடி வந்தேன்! நீ அவசியம் எங்க ஊருக்கு வரவேணும்!... ஆமா ...” என்று சொல்லி, அவனை ஆரத் தழுவி, அவன் கைகளைப்பற்றிய வாறு சாயாக்கடைக்கு அழைத்துச் சென்று சாயா வழங்கினான். சரவணன்.

பிறகு சிங்காரம் வடக்குப்புறம் விடை பெற்றுப் பிரிந்தான்.

சரவணன் மேற்கே தன் ஊருக்குப் போவதா, இல்லை தெற்கே தைலம்மையின் மனை நாடிப் புறப்படுவதா என்று சிந்தித்தவனாக, கால் நாழிப்பொழுதுவரை அந்த நார்ப் புளிய மரத்தூரில் கால்கடுக்க நின்றுகொண்டிருந்தான் !...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/43&oldid=1386353" இலிருந்து மீள்விக்கப்பட்டது