பக்கம்:களத்துமேடு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

47


சற்றைக்கெல்லாம் அவள் மறு சோறுவைத்தாள்.

‘அக்கா மூஞ்சி வாடியிருக்குதே ?’ என்று வருந்தினான் ஏழை.

ஏழைபாழைகளிடம் சோற்றுக்குப் பஞ்சம்தான்.

ஆனால், பச்சாத்தாபத்துக்கு, அன்புக்கு, இரக்கத்துக்கு, கருணைக்குப் பஞ்சம் இல்லை; இல்லவே இல்லை!

“ஒண்னுமில்லேப்பா !... நீ சாப்பிடு... ஆமா, உன் பெண்டாட்டிக்கு கால் கடுப்பு தீர்ந்திடுச்சா?”

அவள் பேச்சை மாற்றினாள்.

அவன் தெரிந்துகொண்டான். “மாப்பிள்ளைகாரக சாப்பிடலீங்களா அக்கா?” என்று மனம் நொந்து வினவினான், விட்ட இலக்கினைத்தொட்டு.

அவள், “இல்லே!” என்று விடை ஈந்தாள், தீனமாக.

பண்ணைக்காரன் எச்சில் தெளித்து அந்திக்குப் பால் கறக்க வருவதாக நினைவூட்டிச் சென்றான்.

அவள் நெடுமூச்சுடன் பாத்திரம் பண்டங்களை உள்ளே எடுத்துக் கொண்டு போய் வைத்தாள். நடையில் வந்து உட்கார்ந்தாள். அடுப்படியைப் பார்க்கப் பார்க்க அவளுக்குப் பசியே எடுக்க வில்லையா?...

விரிந்து கிடந்தது – ‘புலந்திரன் களவு மாலை’ அதை எடுத்தவளுக்கு, திண்ணைப்புறம் ஏதோ மின்னுவது போலத் தெரிந்தது. நடந்தாள். அங்கே மோதிரம் – மூன்று கல் மோதிரம் – ஒன்று இருந்தது. “ஆமா; இது சிலட்டூர்க்காரக மோதிரம்தான்!...” என்று முடிவு செய்து, அம்மோதிரத்தைப் பவித்திரமான அன்பின் நெகிழ்ச்சியுடன் எடுத்து உள்ளே கொண்டுபோய் ஐந்தறைப் பெட்டியில் வைத்துத் திரும்பினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/54&oldid=1386035" இலிருந்து மீள்விக்கப்பட்டது