பக்கம்:களத்துமேடு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

51


சிங்காரம் குவளையை அப்படியே கீழே வைத்துவிட்டு, தைலம்மையைப் பதட்டத்துடன் நோக்கினான். இதாட்டம் நானும் இந்தப் பொண்ணு தைலியை விளையாடறப்ப மொத்தினதை மனசுலே வச்சுக்கணுதான், இப்பைக்கு என்னைப் புரிஞ்சுகிடாத கணக்கிலே மெத்தனமாய் இருக்குமோ ?... இல்லே தன்னாலவே அந்தப் பழசான நடப்பை அப்பவே மனசைவிட்டு நீங்கிப்புடுச்சோ, என்னமோ ?...ம்... பொண்ணு மனசைப் புரிஞ்சுக்கிடுறது ரொம்ப ரொம்ப சிக்கலானதுன்னு அக்கரைச் சீமையிலே பர்மாக்காரக் குட்டி மாஸோஹின் அடிக்கொரு வாட்டி நினைப்பூட்டுமே, அது மெத்தவும் உருப்படியான சமாச்சாரம்தான்போல!... சொந்த அம்மான்மவள் ; சொந்த அயித்தை மவனை இனம் கண்டுகிடுறதுக்குக்கூட வாய்க்காமப் போயிட்டுது...? என்று எண்ணங்களைத் தொடுத்த இளவட்டம், மேலோட்டமாக அவள் முக மண்டலத்தை நோக்கிய வேளையில், அவள் தன்னுடைய இடது கன்னத்தில் காதின் ஓரத்தில் கீழ் முனைத் தழும்பைத் தடவி விட்டவாறு, பலத்த சிந்தனை லயிப்பில் மூழ்கியிருக்கக் கண்டான். அவன் திரும்பவும் அதிர்ச்சி அடைந்தான். ‘ஆமா ; என்னாலே உண்டான வடுதான் அது. விளையாட்டிலே வீம்பு பேசின தைலிக்கு நான் வச்ச அடையாளம் அப்பிடியே மாறாம நிலைச்சிருச்சே ?...சே!... பாவம்!...’ என்றோ நடந்த ஒரு விளையாட்டின் வினைக்கு – வினையின் விளையாட்டுக்கு – இப்போது கழிவிரக்கம் கொள்கிறான் – கழுவாய் தேடிக் கொள்வானோ ?....

‘தைலி!...’

அவன் அவளைப் பெயரிட்டு அழைத்தான். எதிர்ப் பக்கம் விரைவாகப் பார்வையை ஓட்டினான். அந்தச் சிறுவனும் சிறுமியும் இப்போது சிரித்துக் குதித்தார்கள். ஆகவே, அவனுக்கும் கொஞ்சம் ‘தைரியம்’ விளைந்தது.

“தைலி!...”

“ம்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/58&oldid=1386051" இலிருந்து மீள்விக்கப்பட்டது