பக்கம்:களத்துமேடு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

55

பேரில்தான், சமைந்த பெண் தைலம்மைக்குக் கல்யாணம் கட்டிவைக்க ஆயத்தம் செய்யலானார்.

மனிதனுக்கும் விதிக்கும் ஊடாக நடைபெறுகிற வல்லமை பொருந்திய மெளனப் போராட்டத்திலே, தெய்வம் என்ற ஒரு சக்திதான் தீர்ப்பு வழங்க வேண்டும். அந்த ஒரு தீர்ப்பு தைலம்மை வரை சாதகமாகவே அமைந்து விட்டதோ ? அப்படியென்றால், சிங்காரத்தின் கதையை யார் எப்படித் திசை திருப்பப்போகிறார்களோ ?...

தைலம்மைக்கு வர வர, தன் அத்தை மகனை நிறைந்த நெஞ்சுடன், நேர்மைமிக்க அன்புடன் நிமிர்ந்து பார்க்க வேண்டுமென்ற உணர்வே இற்றுவிட்டது போலத் தோன்றியது. ‘என்னதான் ஒக்குமத்தான சொந்தம் சோபாரியானாக்கக்கூட எம்மட்டுக்கும் இந்த மச்சான்காரக இனி அந்நியம் அசல்தானே!’ என்றே அவளது பெண்மையின் சக்தி உட்குரல் எழுப்பிக்காட்டியது. என்றாலும், அறியாப் பருவ மதிலே தானும் சிங்காரமும் மணல்வீடு கட்டி விளையாடியதை – மாங்கொட்டை ஆடியதை – தாயம் போட்டதை எல்லாம் அவள் ஏனோ திரும்பத் திரும்ப நினைவு கூர்ந்தாள். பருவச் செழிப்பு மிகுந்த அவளது மார்பகம் ஏறி ஏறி இறங்கிற்று. தன்னையும் அறியாமல் ஏதோ ஒருவகைப்பட்ட ஏக்கமும் தாபமும் அவளை அலைக்கழிக்கத் துடிப்பதையும் அவள் உணராமல் இல்லை.

தன்னுடைய எதிர்காலக் கணவனுக்காகத் தனிப்பட தயாரித்திருந்த சாப்பாட்டைச் சிங்காரத்திற்குப் படைக்கவே விரும்பினாள் அவள். அவனை உணவு உண்ணும்படியும் கேட்டுக் கொண்டாள்.

ஆனால், அவனோ மறுதளித்து விட்டான்.

அவளுக்கு மனம் மிகவும் சள்ளைப் பட்டது. “என்ன ராவு காலத்திலே சோறு ஆக்கி வச்சேனோ தெரியலையே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/62&oldid=1386069" இலிருந்து மீள்விக்கப்பட்டது