பக்கம்:களத்துமேடு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

களத்து மேடு


இரு நிழல்களையும் நெஞ்சில் ஏந்திக்கொண்டு, வாசல் திண்ணையில் சிந்தனைப்பதுமையின் வடிவு பூண்டு குந்தினாள் தைலம்மை. ‘ஆமா ஆத்தா நோக்கம் அப்படித் தான் இருக்க வேணும்!...பூங்காவனத்துக்கும் இந்த அயித்தை மவனுக்கும்தான் சாமி முடிச்சுப் போட்டு வச்சிருக்கோனும்!’ருக்கோனும்

அந்தி வந்தது.

தைலம்மை பொழுது பட்டும்கூட, சோற்றுப்பானையை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை, ஆசையுடன் சமைத்த உணவுவகைகளை அன்புடன் ஏற்க மறுத்துவிட்ட உள்ளத்தை–உள்ளங்களைப் – பற்றிய போராட்டத்திலேயே அவள் நாழிப்பொழுதை ஓட்டினாள். ‘நம்மரெண்டு பேரோட பொசிப்பும் ஆத்தாளோட சம்மதமும் போழையும் மூடியுமாட்டம் பொருந்தி இருக்கிறப்ப, ஊருக்காக நாம எதுக்கு அச்சப்படவேனும் ?... ஊருல்ல நம்மளைக் கண்டு பயப்பட வேணுமுங்க!’என்று சாப்பிட மறுத்த சரவணனிடம் சமத்காரமாகவும் வக்கனை தப்பாமலும் எடுத்தியம்பியச் சாதுர்ய மொழிகளை அவள் மீண்டும் நினைத்துக் கொண்டாள்.

அதே தொடுப்பில், “நானு ஒன்னோட அயித்தை மவன் சிங்காரமாக்கும் ! ... அடியோடவே என்னை மறந்துப் புட்டியா, தைலி” என்று வேதனையின் வெய்துயிர்ப்புடன் வினாவிடுத்த சிங்காரத்தின் சூழலையும் அவள் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியவள் ஆனாள்.

அந்த இரு வேறு உள்ளங்களுக்குச் சுற்றுச் சார்பாக, அவள் அப்பொழுது தடுமாறினாள். சிலட்டூர் மாப்பிள்ளை சரவணன் கைமறதியாக விட்டுச் சென்ற மோதிரத்தின் ஞாபகம் ஒட்டியது. ஒட்டாமல் பேசிய அவனது மாற்றமும், ஓடி வந்தது. தகப்பன் வந்ததும், அம்மோதிரத்தை உரியவரிடம் சேர்ப்பித்து விடத் துடித்தாள் தைலி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/65&oldid=1386105" இலிருந்து மீள்விக்கப்பட்டது