பக்கம்:களத்துமேடு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

61

மச்சான்காரவுக வேறே மதியம் கழிஞ்சு பெரிய பாறாங் கல்லாத் தூக்கி எம்மண்டை மேலே வீசிப் போட்டுப்புட்டு மறுகிட்டாங்க! ... அப்பன்காரரையும் இம்மாம் பொளுதுக்குக் கூட கண்ணுப் பொறத்தாலே காணலை!... ஆத்தா, நானு சின்னஞ் சிறுசு. எனக்கு ஒண்னும் தெரியாது. ஆனா, நீ அல்லாம் தெரிஞ்ச புண்ணியவதி. அல்லாத்தையும் நடத்திக் காட்டுற தேவதை நீ! நீ தான் என்னோட கண்ணாலத்தைக் குந்தகம் ஏதும் இல்லாம நடத்திக் குடுக்கணும். உன் குஞ்சுக்கு வார நல்லது கெட்டது ஒனக்குத்தானே சேர்த்தி?... என்று பலவாறாக மூளையைப் போட்டுக் குழப்பிக் கொண்டாள் தைலம்மை.

நிலவின் சீதளக்கதிர்கள் மங்கி வந்ததை ஒத்து அவளது ஆசைக் கனவுகளும் மங்கி வருவது போலப் பட்டது, அவளுக்கு. நெஞ்சு ஏமாற்றத்தின் தூண்டிலில் அகப்பட்டுத் தத்தளித்தது. நயனங்கள் கலங்கலாயின. கபால ஓடு வலித்தது. ஒரே இலக்கில் குந்தியிருந்ததால் மண்டை வெடித்துச் சிதறிவிடும் போலிருந்தது. ஆகவே, திண்ணை ஒட்டிலிருந்து எழுந்தாள். அடுப்படியிலும் கலவடையிலும் இருந்த சோறும் குழம்பும் வெஞ்சனமும் அவளைப் பரிதாபமாக நோக்கின. கதவை நாதாங்கி போட்டு விட்டு, தைலம்மை வாசலுக்கு வந்தாள்.

அப்போதுதான் வயல் காட்டிலிருந்து பண்ணைக்காரன் திரும்பி வந்தான். காளைகளைக் கொட்டடி முளையில் ‘உருகுசுருக்கு’ போட்டுப் பிணைத்தான். தீவனம் வைத்தான். பிறகு கை கால் முகம் சுத்தம் செய்து திரும்பினான்.

வேப்பங்காற்றை அனுபவித்த அவள், “சோறு போடவாப்பா?” என்று அவன் களைப்பை உணர்ந்து பரிவு கூட்டிக் கேட்டாள்.

“சோத்துக் கென்ன அக்கா அவசரம்?...ரவைப் பொளுதுக்கு காத்தாட நின்னுப்புட்டு வேணும்னாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/68&oldid=1386116" இலிருந்து மீள்விக்கப்பட்டது