பக்கம்:களத்துமேடு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

களத்து மேடு

போடுங்க. ஆமா, முதலாளி ஐயா எங்கணே பறிஞ்சாங்க... இம்மாம் பொழுதுக்கு எனக்குத் தெரிஞ்சு வீட்டுக்கும் வராம வயல் காட்டையும் நாடி வராம ஒருபோதும் இருக்க மாட்டாகளே! அவுக மேலுக்கு போன இடத்திலே – வந்த லக்கிலே ஏதாச்சும் ஒச்சம் வந்திடுச்சா? ஒண்ணுமே தெகை புரியக் காணமே?” என்று நைந்த தொனியில் ‘உணர்ந்து’ பேசினான். நன்றியின் கசிவில் பாசத்தின் குமிழிகள் எம்பின. ஏழைக்கும் நன்றிக்கும் தான் சொந்தம் கூடுதல்!

அவள் என்ன மறுமொழி பகர்வாள், பாவம்?

நாற்றுக் கட்டுக்கள வந்து சேர்ந்தன. சின்னச்சாமி “சொச்சப் பணம் குடுத்துவிடவேனும்,” என்று தெரிவித்தான்.

“அல்லாம் அப்பன்காரரு வந்து குடுத்திடுவாக, நாத்துக் கட்டுகளை சீர் குலைச்சிடாம, மேலத் திண்ணைத் தொங்கலிலே அடுக்கிப் போட்டுப் புட்டு, விடிய இங்காலே வா?” என்று ஒரு முத்தாய்ப்பு வைத்து விட்டு, உள்ளே சென்று சருவச் சட்டியை எடுத்தாள். பண்ணைக்காரனின் பசியை அமர்த்த வேண்டாமா?

அவன் உண்டு, ஏப்பம் பறித்து, எச்சில் தெளித்துச் சென்றான். பின் பக்கம், கூப்பிடு தொலைவிலிருந்த சேர்வையின் சோளக் கொல்லைக்குக் காவல் இருக்கப் போய் விடுவான். அவனுக்குத் துணையிருக்கச் சோளக் கொல்லைப் பொம்மை மட்டுமல்ல, அங்கே களவாணித்தனமாக நத்தி ஓடிவந்து மறையும் பறவைக் கூட்டங்களும் தயாராக இருக்கும்!

ஊர் அடங்கிவிட்டது.

அவள் மனம் அடங்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/69&oldid=1386120" இலிருந்து மீள்விக்கப்பட்டது