பக்கம்:களத்துமேடு.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

களத்து மேடு

இப்படிப்பட்ட நல்ல மனம் ஒன்றிரண்டு இருக்கக் கண்டு தானே, மழை பெய்யுது!’-மேற்கத்திப் பக்கச் சாமியார் ஒருவர், அந்தத் தோட்டத்தைக் காணும் போதெல்லாம் இப்படிப்பட்ட யதார்த்தப் பேச்சைத்தான் வெளியிடுவார் உண்மை நிலையும் அதுதானே?

ஆதித்த பகவானின் கருணையின் துளிகளெனச் சிந்திச் சிதறி வழிநெடுக விரிந்து கிடந்த கதிர்க்கிரணங்களை இதம் பார்த்து மிதித்தவாறு மடங்கி மடங்கி நடந்து சென்றாள் தைலம்மை. கைச்செலவுக்கு அவளது தோட்டத் தண்ணீர் கை கொடுக்கும். நாலைந்து முட்டி இறைத்தாலே யதேஷ்டம். ஆனால், சோறு வடிக்கவும் நீராகாரத்துக்குச் சோற்றில் இரவில் தண்ணீர் ஊற்றவும் அவளுக்குத் தன் கேணித் தண்ணீர் உதவாது. அயலிடங்களைத்தான் அவள் நாட வேண்டும்.

தோழிகளின் ‘படை’ சேர்ந்தால் மேற்கே செல்வாள். ஒன்றியாக இருந்துவிட்டால், கிழக்குப் பக்கம் குறி வைப்பாள். இப்போதும் அப்படிப்பட்ட தனிமைக்கு இலக்கானாள். அம்மையப்பன் கிணற்றடிக்கு இலக்கு வைத்தாள். மேலும், ‘இப்பைக்கு நாலு குட்டிங்களோடே ஒண்ணடி மண்ணடியாய் போனாக்கா, ஒண்ணுக்கிடக்க ஒண்ணு வாயைக் கிண்டி அவலைக் கொட்டி வேடிக்கை பார்க்குங்க!. அப்பன்காரக போக்கும் சிலட்டூர் மச்சான் கோவமும் திசை மாறித் திசை திரும்பியிருக்கயிலே, நாம யாரிடம் தான் வாய் கொடுக்க ஏலும்?...பிறத்தியார் கஷ்ட நஷ்டத்திலே ஈவு இரக்கம் காட்டுற ஜன்மங்கதான் இந்த நாட்டுப் புறத்திலே அருப்புருவமாப் போயிடுச்சே?’ என்றும் சிந்தித்தாள். ஆக்வே, அவளுக்கு அவள் முடிவுதான் விதி. ஆனால், ‘விதி’யின் கைரேகையை அவள் எங்ங்ணம் உணர முடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/71&oldid=1386162" இலிருந்து மீள்விக்கப்பட்டது