பக்கம்:களத்துமேடு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

களத்து மேடு


ஆனால், அங்காளம்மை விட்டால்தானே? “தங்கச்சி! ஒரு இடுசாமத்தாக்கல் காதுக்கு விழுந்திச்சே,மெய்தானா?... ஒனக்கு தெரியாங்காட்டியும்? எனக்குச் சேதி எட்டிப்புடுச் சாக்கும்! என்ன, அப்படி வெட்டாடாட்டம் தெகை தப்பி முளிக்கிறே?” என்று கேட்டாள்.

தைலம்மைக்கு அந்தச் சவுக்கடி தன் உயிர்த் துடிப்பில் பட்டு விலகியது. ‘என்ன?’ என்றுதான் கேட்க இருத்தாள். அவள் கேட்டால், அங்காளம்மை என்ன பதில் சொல்வாள் என்றும் அவளும் அறிவாள். தன் தகப்பனைப்பற்றிப் பேச்சு வரும்; அல்லது தன் நேச மச்சானைப் பற்றிய தாக்கல் வரும். இல்லையென்றால்...?

இப்படி அவள் நினைத்தபோது, நேர்மட்டத்தில் பூங்காவனம் வரக்கண்டாள். அவளைக் கண்டதும், பொட்டில் தட்டினாற்போன்று அவள் நேற்றுச் சொன்ன செய்தி ஞாபகத்திற்கு வரலாயிற்று. “அக்கா, அக்கா! எனக்கு ஒரு பெரிய அதிஷ்டம் வந்திருக்காக்கும்! அதை உங்களுக்கு விளுக்காட்டிப்புட்டுப் போவத்தான் ஓட்டமா ஓடியாந்தேன்! நானு சிலட்டூச் மருமகப் பெண்ணாக ஆகப் போறேனாக்கும்.” என்று ஆனந்தத் துள்ளலுடன் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு வந்த அடித்தடம் தெரியாமல் ஓடிவிட்ட பூங்காவனத்தின் அச் செயல் தைலம்மைக்கு ஏதேதோ புதிர்களைப் போட்டது. விடுகதைகளைப் போட்டது. ஆனால் எதற்கும் அவள் சிக்கலைத் தீர்த்து விடை கண்டுபிடிக்க முடியாமல் தவித்தாள்.

“அக்கா!”

“வா தங்கச்சி!” என்று பதிலுக்கு உரைத்துவிட்டு, தலைச் சுமையாக இருந்த குடத்தைக் கைப்பற்றுதலாக அணைத்துக்கொண்டாள் தைலம்மை. சொட்டுச் சொட்டாக நீர்த் துளிகள் வழிந்தன. அவை அவளது கதுப்புக் கன்னங்களிலும் மூக்குத்தியின் ஒளி முனைகளிலும் விளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/73&oldid=1386178" இலிருந்து மீள்விக்கப்பட்டது