பக்கம்:களத்துமேடு.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

களத்து மேடு

நான் சொல்லந் தொட்டியும் நீ இதுபத்திப் பேசாதே. பேசினா ஒனக்கு ஒரு விரல்கடை மண்ணுகூட உன்கண்ணுப்பொறத்தாலே காட்ட மாட்டேண்டா!... அப்பாலே, நீ பண்ணுறதைப் பண்ணிக்கடா!... போ!... நானு ஒண்னும் உம் மண்ணைத்தின்னு ஏப்பம் விட்டுபுட மாட்டேன். அந்த மாதிரிப் பாடத்தை அந்தக் கோகுலகிருட்டினரு எனக்குக் கத்துத்தரலைடா! போ, வெளக்கைப்பொருத்தி வச்சுக்கிட்டு போயி அல்லி அரசாணி மாலையை ஒம்பொஞ்சாதிக்குப் படிச்சுகாட்டு. அந்த நேரத்தில வாச்சும், அண்ணன் தம்பிக் குள்ளாற காடு மாத்தி காடுபோடுற துர்ப்புத்தி-தலகாணி மந்திரம் படிக்கிற பொட்டைப் புத்தி வராம இருக்கட்டும்!...” என்று பேசி முடித்தது தான் தாமதம்; உடனே பெரியவர் வேர் அறுபட்ட ஒதிய மரமாகத் தரையில் சாய்ந்தார். மீசை வேர்த்துக் கொட்டியது, கண்களில் ரத்தம் கட்டிற்று. தைலம்மை வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதாள். உடனே நாட்டு வைத்தியருக்கு ஆள் அனுப்பப்பட்டது. சோமசுந்தரம் என்றால் நாட்டு வைத்தியத்தில் அசகாய சூரர். கடுசான் மருந்து கொடுத்தார். சேர்வையின் உயிரை எமதர்ம ராஜனிடமிருந்து பறித்துக் கொண்டு வந்து கொடுத்து விட்டார்.

இப்போது அந்நிகழ்வு தைலம்மையின் நெஞ்சத்தைத் தடவியது--கார்கால மின்னலாக, அப்போது அவளுள் 'ஆத்தா காட்டேறி' புகுந்து ஆறுதல் முறுவல் சிந்துவதாகவே ஒர் உணர்வு தர்ம சிந்தையுடன்-பலகீனமில்லாத தன்னம்பிக்கைப் பொலிவுடன்-ஊடாடியிருக்க வேண்டும். "ஆத்தா, எம்புட்டு ரத்தப் படைப்பு ஒனக்கு இன்னமும் நெஞ்சுமுட்டி வரலையா? அப்பன்னாக்க, எம்புட்டு பாழத்த உசிரையே ஒனக்குப் பள்ளயம் போட்டுப் படச்சுப்புடறேன்! என்னோட அப்பனை பொழைக்க வச்சுப்புடு, மூத்தவளே!’’ என்று புலம்பினாள். உடம்பு புல்லரித்தது.

பிறகு, சம்மணம் கோலித் தன் தந்தையின் காலடியில் குந்தினாள் தைலம்மை. புளியம் பூக்கள் பாதங்களில் சிதறிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/81&oldid=1386127" இலிருந்து மீள்விக்கப்பட்டது