பக்கம்:களத்துமேடு.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

77

 சோதித்தார். மிக நுணுக்கமான அழுத்தத்துடன் கூர்த்தமதி பதித்துப் பார்த்தார் கைநாடியை.

"ஐயா!" என்று குறுக்கிட்டாள் தைலம்மை.

"உஸ்!" என்று சைகை காட்டிக் கையை அமர்த்தி விட்டு, இடுப்பில் செருகியிருந்த பச்சை மூலிகை வேர் ஒன்றை எடுத்து அதைப்பற்ற வைத்து, அதைப் புகை சூழச் சேர்வையின் மூக்குக்கு நேராகப் பிடித்தார். பிடித்துக் கொண்டே இருந்தார். பிறகு உள்ளங்கால்களைச் சூடு பறக்கத் தேய்த்தார்.

வைத்தியரின் முகம் மலர முனைவதும் வாட்டம் கூட்டுவதுமான ஜீவ மரணப் போராட்டத்தை நடத்திக் காட்டிக் கொண்டிருந்தது.

வைத்தியரின் கைகள் சூன்யத்தின் அண்ட வெளியில் தாமாகவே குவிந்தன. அவர் மீண்டும் செங்காளியப்பன் சேர்வையைப்பார்த்தார். அவர் முகவிலாசம் மகிழ்வால் விசாலம் பரப்பியது. 'ம்!’ என்று தன்னம்பிக்கையின் மோனத் தெளிவுடன் சேர்வையின் நெஞ்சைத் தடவிக்கொடுத்தார்,

"முதலிலே வண்டி இட்டாங்க; ஐயாவை வூட்டுக்கு கொண்டுகிட்டுப் போயிடலாம்," என்று 'துருசு' பண்ணினார்.

தைலி பரிதாபமாக வைத்தியரைப் பார்த்தாள்.

"தங்கச்சி, ஒங் கண்ணீரைத் துடைச்சுப்புடுவா ஆத்தான்னு தான் எனக்குப்படுது’’ என்றார்.

தைலம்மை நல்ல சிரிப்புச் சிரித்தாள்.

அதோ வந்துவிட்டது பெட்டி வண்டி!

கோடானு கோடி வினை வரினும் மனம் குறையாமல் இருப்பதே கோடி பெறும்!-இதுவே வாழ்க்கைக்கு இடப் பட்ட ஒர் ஆதர்ச உண்மையாகும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/84&oldid=1386141" இலிருந்து மீள்விக்கப்பட்டது