பக்கம்:களத்துமேடு.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

களத்து மேடு

செங்காளியப்பன் சேர்வையை அவர் வீட்டில் கொணர்ந்து கிடத்தினார்கள்.

அவர் இன்னமும் சரியாக மூச்சுப்பறிக்கவில்லை.

தைலம்மை மனம் குறையாமல்-மனம் கேடுபடாமல் தான் நம்பி நின்ற தெய்வத்தையே உயிர்க்கழுவில் நின்று பிரார்த்தித்தாள்.

பொழுது ஏறி இறங்கத் தலைப்பட்டது. நல்லவேளை! சேர்வையின் மேனியில் அசைவு காணத் தொடங்கியது.

மறு முறை 'நாடி' பிடித்துப் பார்த்தார் வைத்தியர். அவர் முகக் குறிப்பில் நன்னம்பிக்கைச் சுடர் தெறித்தது. அந்நம்பிக்கையின் வெளிச்சத்தில் தைலம்மை மனம் தேறினாள்.

வைத்த கண் எடுக்காமல் தன் தந்தையையே பார்த்துக் கொண்டு குந்தியிருந்தாள் தைலம்மை.

அப்போது சிங்காரம் வியர்க்க விறுவிறுக்க உள்ளே நுழைந்தான். "அம்மான்!" என்று கண்ணீர் கசிய அலட்டினான். ஆதரவாகத் தைலம்மையைப் பார்த்தான்.

சற்றுக்கழித்து, அங்குச் சிலட்டூர் மாப்பிள்ளை சரவணன் வந்து நின்றான். "என்ன இவுகளுக்கு?" என்று பதறிப் போய் வினவினான். சேர்வைக்காரரின் நெற்றியில் கையை வைத்துப் பார்த்தான். அவன் கண்கள் குளமாயின. தைலம்மையின் பக்கமாகப் பார்வையை மாற்றினான்.

தைலம்மை தேம்பினாள்.

சுடு தண்ணீரில் செந்தூரப்பொடியைத் தூவிப் பாலாடையில் சேர்வைக்குப் புகட்டினார் வைத்தியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/85&oldid=1386144" இலிருந்து மீள்விக்கப்பட்டது