பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி

9

நமக்குக் கிடைக்கப் பெறவில்லை. அகழ்வாராய்ச்சிப்பிரிவில் நாம் பின்னணியில் இருப்பதால் அதற்கான வாய்ப்புகளும் இல்லை.

இந்நிலையில் நமக்குக் கிடைத்திருக்கின்ற ஒருசில கல்வெட்டுகளையும் பிற மேற்கோள் சான்றுகளையும் ஆதாரமாகக் கொண்டு விரிவாகத் தமக்கே உரிய முறையில் ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனிவேங்கடசாமி அவர்கள் இத்நூலினைப் படைத்துள்ளார்கள். களப்பிரர் பற்றிய விரிவான செய்திகளைக்கொண்ட முதல் நூலாக தனி நூலாக இது அமைகின்றது. அவர்களே குறிப்பிட்டது போலக் களப்பிரர் வரலாற்றின் பகற்காலத்தைக் காணத் தொடர்ந்து ஆய்வதற்கு இந்நூல் தூண்டுகோலாக அமையும் என நம்புகிறோம்.

பல்கலைக்கழகங்களும் இன்னபிற ஆய்வு நிறுவனங்களும் செய்துவரும் பணிகளை நாம் குறைத்து மதிப்பிட முடியாது என்றாலும் சில தனி மனிதர்கள், பல நிறுவனங்களின் பணிகளைவிட மிகுதியாக ஆய்வுக்கும் வரலாற்றுக்கும் தங்கள் பங்கைச் செலுத்தியிருக்கிறார்கள் என்பதனை நாம் மறுக்க முடியாது. இவ்வாறு குறிக்கத்தக்க சிலரில் மயிலை சீனி வேங்கடசாமி அவர்களும் ஒருவர். அவர் எழுதிய நூல்கள் பல அடுத்து மக்கள் வெளியீட்டின் வழி வர இருக்கின்றன.

உடல் நலக்குறைவினால் ஓய்வெடுத்துவரும் அறிஞர் மயிலை சீனி அவர்கள் உள்ளம் சோர்வடையாமல் ஆராய்ச்சியில் காட்டிவரும் ஆர்வம் ஏனையோருக்கு எடுத்துக்காட்டாக அமைவதாகும். ஏற்கனவே நூலாக வெளியிடப்பட்டவையன்றித் தனிக் கட்டுரைகளும் நூல்கள் பல எழுதுவதற்கான குறிப்புகளும் அவரிடம் இருக்கின்றன. இவற்றைத் தொகுத்து நூல்வடிவம் கொடுக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். அவற்றையும் விரைவில் தமிழகம் பெற்றுப் பயனடையும் என்று நம்புகின்றோம்.

மயிலைசீனி வேங்கடசாமி அவர்களுக்கும் மக்கள் வெளியீட்டுக்கும் தொடர்பாக இருந்து இந்நூலினை எழுத அவருக்குத் தூண்டுகோலாகவும் வெளியிட நமக்குத் துணையாகவும் இருந்து நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த சென்னைப் பல்கலைக் கழகத் தொல்பொருள்துறை ஆய்வு மாணவர் திரு. ர. ராமசாமி அவர்களுக்கும் இந்நூலுக்கான பொருளடைவு தயாரித்துக் கொடுத்த சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் புலவர் இ. சுந்தரமூர்த்தி அவர்களுக்கும் நன்றியுடையோம்.

மே.து.ராசுகுமார்