பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

பொறாமையை உண்டாக்கியிருக்க வேண்டும். அதனால் சமயச் சண்டை உண்டாகித்தான் இருக்க வேண்டும்.ஆனால், தற்காலிகமாகச் சமயப் பூசல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த வச்சிர நந்தியின் சங்கம் கி.பி. 5-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது என்பதை யறித்தோம். கி.பி. 6-ம் நூற்றாண்டு தொடங்கியபோது, தமிழகத்தின் அரசியலில் விரைவான மாறுதல்கள் ஏற்பட்டன. களப்பிரரின் படையெடுப்பும் அவர்கள் பாண்டி நாட்டைக் கைப்பற்றியதும் இந்தக் காலத்தில்தான் நேரிட்டன.[1]

பாண்டியருடைய ஆட்சிக்காலத்திலே வச்சிரநந்தி திராவிட சங்கத்தை அமைத்தார் என்றும் அதைப் பாண்டியரின் ஆதரவு பெற்று அமைத்தார் என்றும் வச்சிரநந்தி இந்தச் சங்கத்தை அமைத்த பிறகுதான் களப்பிரர் தமிழகத்தில் வந்து தங்களுடைய ஆட்சியை நிலைநிறுத்தினார்கள் என்றும் ஐயங்கார் கூறுகிறார். இவர் கூற்று வரலாற்றுக்கு முற்றிலும் மாறுபடுகிறது. கி.பி. 470-ல் வச்சிரநந்தி திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார். அந்தக் காலத்தில் பாண்டி நாட்டில் பாண்டியர் ஆட்சி இல்லை, களப்பிரர் ஆட்சிதான் இருந்தது. பாண்டிய சேர சோழர்களின் ஆட்சி கடைச்சங்க காலத்தின் இறுதியிலே, ஏறத்தாழக் கி.பி. 250-ல் முடிவடைந்து விட்டது. ஆகவே, பாண்டியர் ஆட்சிக்காலத்திலேயே வச்சிர நந்தி திராவிட சைன சங்கத்தை அமைத்தார் என்று இவர் கூறுவது தவறு.

இனி, திரு.எஸ்.வையாபுரிப் பிள்ளையவர்கள் வச்சிரநந்தியின் திராவிட சங்கத்தைப்பற்றிக் கூறுவதைப் பார்ப்போம். இவர் கூறுகிற சில கருத்துக்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். தொல்காப்பியம் வச்சிர நந்தியின் திராவிட சங்கத்தில் எழுதி வெளியிடப்பட்ட நூல் என்று வையாபுரியார் எழுதுகிறார். இதற்குச் சான்று, தொல்காப்பியத்தில் ஓரை என்னுஞ்சொல் காணப்படுகிறதாம்! இவர் இதுபற்றி எழுதுவது வருமாறு:

"வச்சிர நந்தியின் பேர்போன சங்கம் கி.பி.470-ல் நிறுவப்பட்டது. தொல்காப்பியம் அந்தச் சங்கத்திலிருந்து வெளிவந்த முதல் இலக்கியமாக இருக்கக்கூடும். இதன் ஆசிரியர் ஓரை என்னும் சொல்லை (பொருள்135) ஆள்கிறார். ஓரை (சம்ஸ்கிருத ஹோரா) என்னும் சொல்லைக் கிரேக்க மொழியிலிருந்து கி.பி. 3-வது அல்லது 4-வது நூற்றாண்டில் சம்ஸ்கிருத வான நூற்புலவர்கள் கடனாகக் கொண்டார்கள். சம்ஸ்கிருத மொழிக்காரர் கிரேக்க மொழியிலிருந்து எடுத்துக் கொண்ட ஹோராவைத் தொல்காப்பியம் கூறுகிறபடியால் இந்நூல் கி.பி.4-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.[2]

வையாபுரியார் கூறுகிற இந்தக் கருத்து இவருடைய சொந்தக் கருத்து அன்று. திரு.கே.என். சிவராசபிள்ளை இந்தத் தவறான கருத்தை முன்னமே வெளியிட்டுள்ளார். அவரிடமிருந்து எடுத்துக் கொண்ட இந்தத் தவறான கருத்தை வையாபுரியார், தான் எங்கிருந்து இக்கருத்தைப் பெற்றுக் கொண்டார் என்பதைக் கூறாமல் தன்னுடைய சொந்தக் கருத்தாகக் கூறுகிறார். சிவராச பிள்ளை கூறுயுள்ளது இது! ஹோரா என்னும் கிரேக்க


  1. 3, M.S. Ramaswami Ayyangar, Studies in South indian Jainism, 1927, pp. 52-53.
  2. 4. S.Vaiyapuri Paal, History of Tamil Language and Literature 1956, p.14