பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி

தெரிகிறது. தொல்காப்பியர் இந்த ஓரையைத்தான் கூறியுள்ளார். இந்த ஓரை கிரேக்க சம்ஸ்கிருத ஓரை அன்று.

மிகப் பழங்காலத்திலேயே திராவிட இனமக்கள் வாழ்ந்த ஊர்களில் சிறுவர்களுக்குத் தனியாகவும் சிறுமிகளுக்குத் தனியாகவும் ஓரா (ஓரை) என்னும் பெரிய கொட்டகைகளை அமைத்திருந்தனர் என்பது தெரிகிறது. இக்காலத்தில் பழங்குடி மக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறவர்கள் இதுபற்றியும் ஆராய்ந்தால் உண்மை கிடைக்கும். தொல்காப்பியர் காலத்திலும் தமிழ்த் திராவிடர்கள் தங்கள் இளைஞர்களுக்கும் மகளிர்க்கும் தனித் தனி ஓரைகளைக் கட்டிவைத்திருந்தனர் என்பதைத் தொல்காப்பியர் கூறுகிற ஓரை என்னுஞ் சொல்லிலிருந்து ஊகிக்கலாம். சங்கச் செய்யுட்களில் ஓரை (ஓரா) என்னுஞ்சொல் காணப்படுகிறது. சங்கப் புலவரான உலோச்சனாரும் ஓரை என்னுஞ் சொல்லை ஆள்கிறார். “ஓரை மகளிரும் ஊரெய் தினரே” (நற்றிணை.398:5) என்று அவர் கூறுவது காண்க. ஆகவே, சிவராசபிள்ளையும் வையாபுரிப்பிள்ளையும் மற்றவர்களும் தவறாகக் கருதுகிறபடி ஓரை என்னுஞ்சொல் கிரேக்க-சம்ஸ்கிருதச் சொல் அன்று. அது தூய திராவிட மொழிச் சொல் என்பதை அறிகிறோம். ஓரை என்னும் திராவிடச் சொல்லின் பழமையை அறியாத சிவராசர்களும் வையாபுரியார்களும் ஓரையைக் கூறுகிற தொல்காப்பியரை மிகமிகப் பிற்காலத்து வச்சிரநந்தி சங்கத்தில் இருந்தவர் என்று கூறுவது வரலாறு அறியாத போலிவாதம் ஆகும். திராவிட இனத்து மக்கள் பழங்காலத்தில் வழங்கிவந்த ஓரா-ஓரையைக் கூறுகிற தொல்காப்பியர் மிகமிகப் பழங்காலத்தில் இருந்தவர் என்பது இதிலிருந்து நன்றாகத் தெரிகிறது.

வையாபுரியார், தொல்காப்பியரைப் பிற்காலத்து வச்சிரநந்தி சங்கத்தில் இருந்தவர் என்று அறியாமல் கூறியது போலவே வேறு சில சங்கப் புலவர்களையும் பிற்காலத்து வச்சிரதந்தி சங்கத்தில் இருந்தவர்கள் என்று போலிக் காரணங்காட்டிக் கூறுகிறார். ஆழ்ந்த பாராமல் மேற்போக்காகக் கூறுகிற இவருடைய கருத்து இதிலும் போலிவாதமாகக் காணப்படுகிறது. கடைச் சங்க காலத்துப் புலவர்களான உலோகச்சனார், மாதீர்த்தனார் முதலானவர்களைப் பிற்காலத்து வச்சிரநந்தியின் திராவிடச் சங்கத்தோடு இவர் இணைக்கிறார். "தமிழ் மொழி தமிழ் இலக்கிய வரலாற்றிலே முதல் தரமான முக்கிய நிகழ்ச்சியொன்று கி.பி.470-ல் நிகழ்ந்தது. அதுதான் மதுரையிலே வச்சிரநந்தியின் மேற்பார்வையில் நிறுவப்பட்ட தமிழ்ச்சங்கம், பழைய புலவர்களிலே உலோச்சனார், மாதிர்த்தனார் முதலான ஜைனப் புலவர்களைப் பார்க்கிறோம். புறதானூறு 175-ஆம் பாடலிலும் அகநானூறு 59ம் பாடலிலும் மறுபிறப்பும் புராணக்கதையும் கூறப்படுகின்றன. அகம் 193-ல் மதக்கொள்கையைப் பற்றின குறிப்பைக் காண்கிறோம். ஆனால், தமிழ் மொழி தமிழ் இலக்கியங்களை ஆராயும் பழைய ஜைன நிறுவனத்தைப்பற்றி தெற்கு முன்பு கேள்விப்படவில்லை.[1] (வச்சிரதந்தியின் ஜைன நிறுவனத்தைத்தான் முதல் முதலாகக் கேள்விப்படுகிறோம்). இவருடைய இந்தக் கூற்றையும் அலசி ஆராய்வோம்.

  1. 7.S Vaiyapuri Pral, History of Tamil Language and Literature pp. 58-59.