பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி 114

13!) பனைத்தின்ற எச்சிற்கையில் உள்ள இறைச்சியின் கொழுப்பை வீட்டுச்சுவரில் தேய்த்துவிட்டுப் போர்க்கூத்துக்குச் சென்ற வீரனையும், அவன் திரும்பிவந்து குடிப்பதற்காக வைத்துள்ள கட்சாடியையும் பாடுகிறார். (புறம் 258) மற்றும் இவர் பாடியுள்ள காதற் செய்திப்பாட்டுக்கள் பல உள்ளன. சைனத் துறவிக்கு விலக்கப்பட்டவைகளை யெல்லாம் பாடுகிற உலோச்சனாரை வையாபுரிப்பிள்ளை, வச்சிரநந்தியின் சைனத்துறவிகளின் சங்கத்தில் இருந்தவர் என்று கூறுகிறார். இவர் கூற்று நம்பத்தக்கதா? இதை ஒப்புக்கொள்ள முடியுமா? களப்பிரர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 5-ம் நூற்றாண்டில் வச்சிர நந்தியின் சைனமுனிவர் சங்கத்தில் இருந்தவர் என்று வையாபுரிப் பிள்ளை கூறுகிற உலோச்சனார், களப்பிரர் காலத்துக்கு சில நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்திருந்த சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளியைப் பாடுகிறார். (புறம்377) கி.பி. 5-ம் நூற்றாண்டில் வச்சிரநந்தியின் சங்கத்தில் உலோச்சனார் இருந்தவர் என்றால், அவருடைய செய்யுட்கள் கடைச்சங்க காலத்துத் தொகை நூல்களில் எப்படி இடம் பெற்றிருக்கக்கூடும்?

மாதீர்த்தன் என்னும் கடைச்சங்கப் புலவரையும் வையாபுரியார் வச்சிரநந்தியின் தமிழச் சைன சங்கத்தவர் என்று கூறுகிறார். மாதீர்த்தனார் குறுந்தொகை 113-ம் செய்யுளைப் பாடியவர். இந்தப் பாட்டு அகப்பொருனைப் பற்றிய காதற்பாட்டு. இந்தக் காதற்பாட்டைப் பாடிய மாதீர்த்தனார் வச்சிரநந்தி சங்கத்தைச் சேர்ந்த சைன முனிவராக இருக்க முடியுமா? இவற்றையெல்லாம் கருதாமல், பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை இவர்களைச் சைன முனிவர்களின் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார்! பகுத்தறிவு உள்ளவர் இவர் கூற்றை ஏற்றுக் கொள்ள முடியுமா?

புறம் 175-ம் செய்யுளிலும் அகம் 59-ம் செய்யுளிலும் அகம் 193-ம் செய்யுளிலும் சைனரின் மதக்கொள்கைகள் கூறப்படுகின்றன என்றும் ஆகவே அந்தச் செய்யுட்களைப் பாடிய புலவர்கள் வச்சிர நந்தியின் வனத் தமிழச் சங்கத்தைச் சார்ந்தவர்கள் என்றும் வையாபுரியார் குறிப்பாகக் கூறுகிறார் “புறம் 175- ம் பாட்டிலும் அகம் 59-ம் பாட்டிலும் மறுபிறப்புப் பற்றியும் ஒரு புராணக்கதையைப் பற்றியும் அகம் 103-ல் சைனருடைய சமயக் கொள்கை பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. தமிழ் மொழி தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் பற்றின பழைய சைன நிறுவனத்தைப் பற்றி நாம் கேள்விப் படவில்லை”. (வச்சிரநந்தியின் சங்கத்தைத்தான் கேள்விப்படுகிறோம்) என்று வையாபுரியார் எழுதுகிறார்.[1] அதாவது புறம் 175, அகம் 59, 193 ஆகிய செய்யுட்களைப் பாடியவர்களும் சைன சமயத்தார் என்றும் அவர்கள் வச்சிரநந்தியின் தமிழ்ச் சைன சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வையாபுரியார் கூறுகிறார். இவர் கூறுவதை ஆராய்ந்து உண்மை காண்போம்.

புறம் 175-ம் செய்யுளைப் பாடியவர்களில் ஆத்திரையனார். இவருடைய பெயரே இவர் பிராமணர் என்பதைத் தெரிவிக்கிறது. இவருக்கு உதவி செய்த ஆதனுங்கன் என்பவனை இவர் இச்செய்யுளில் பாடுகிறார். என் உயிர் போமளவும் என் மனம் உன்னை மறக்காது என்று இவர் கூறுகிறார். இதில் சைன சமயக் கொள்கை என்ன இருக்கிறது? இது எல்லாச்


  1. 8. S.Valyapuri Pia, History of Tamil Language and Literature p5